முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தினர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தினர்.


முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்ட பலரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தனிப்படை காவல் துறையினர் 300 க்கும் மேற்பட்ட நபர்களிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி விசாரணை மாற்றப்பட்டது. இதையடுத்து ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள், செல்போன் தரவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.


இந்த நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயனை சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகுமாறு, சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். கடந்த 11 ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அன்றைய தினம் கேரள மாநிலத்தில் வேறோரு வழக்கில் சயன் ஆஜரானதால் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இதன்படி கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சயன் விசாரணைக்கு ஆஜரானர். அவரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.