கோவை அவிநாசி சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உடனடியாக காரிலிருந்து இறங்கியதால் உயிர் தப்பினார்.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீரங்கபதி என்பவர் இன்று காலை தனது காரில் அவிநாசி சாலையில் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் சின்னியம்பாளையம் அருகே வந்தபோது, வாகனத்தின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறத் தொடங்கியது.
புகை வந்த சில விநாடிகளில் தீ
இதைக் கவனித்த ஓட்டுநர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு காரை சாலையோரத்தில் நிறுத்தி கீழே இறங்கினார். சில நிமிடங்களுக்குள் கார் தீப்பற்றி எரியத் தொடங்கியது. குறுகிய நேரத்தில் தீ வேகமாக பரவி கார் முழுவதும் எரிந்தது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பீளமேடு தீயணைப்பு நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். எனினும் அதற்குள் கார் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அவிநாசி சாலையில் சில நேரம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.
