கோவை : ராஜா, பாரத மாதா என பல வேடங்களில் வந்த வேட்பாளர்கள்.. களைகட்டிய இறுதி நாள் வேட்பு மனுதாக்கல்..!

மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேடமணிந்தும்,நூதன முறையிலும் வந்து சில வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்வது வழக்கம்.

Continues below advertisement

வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இப்பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 28 ம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். வேட்பு மனுத் தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று ஏராளமானோர் வேட்பு மனுதாக்கல் செய்து வருகின்றனர்.

Continues below advertisement


மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேடமணிந்தும், நூதன முறையிலும் வந்து சில வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்வது வழக்கம். கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் நூர் முகமது. இவர் இதுவரை சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல் என 37 முறை போட்டியிட்டு உள்ளார். தற்போது 38 முறையாக சுந்தராபுரம் பகுதியில் சுயேட்சை வேட்பாளராக 94-வது வார்டு போட்டியிடுகிறார். இதற்காக மன்னர் உடை அணிந்து இரு காவலர்களுடன் தள்ளுவண்டியில் அமர்ந்தபடி சிறிது தூரம் ஊர்வலமாக கையில் கத்தியுடன் வேட்பு மனுதாக்கல் செய்ய வந்தார். பின்னர் கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நூர் முகமது வேட்பு மனுதாக்கல் செய்தார்.

தள்ளுவண்டியில் ராஜா வேடமணிந்து வந்தபோது அங்கிருந்த பொதுமக்கள் இவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர். தேர்தல்களில் பணத்தை கொடுத்து வாக்குகளை வேட்பாளர்கள் விலைக்கு வாங்குகின்றனர் எனவும், மக்கள் பணம் வாங்கிவிட்டால் மன்னராக இருக்க முடியாது எனவும், மக்கள் என்றும் மன்னர்கள் என்பதை உணர்த்தவே மன்னர் உடையணிந்து வேட்பு மனுதாக்கல் செய்ய வந்துள்ளேன் என நூர் முகமது தெரிவித்தார்.


இதேபோல கணபதி பகுதியில் உள்ள 19-வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அமுதகுமாரி (40) தாமரை மலருடன் பாரத மாதா வேடமணிந்து வடக்கு மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தார். தனியார் செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக இவர் பணியாற்றி வருகிறார். பாரதிய ஜனதா கட்சி பெண்களுக்கு பல்வேறு முன்னுரிமைகளை வழங்கியுள்ளதாலும், பாரதமாதாவை போற்றும் விதமாகவும் இதுபோன்று வேடமணிந்து வேட்பு மனுதாக்கல் செய்ததாகவும் அமுதகுமாரி தெரிவித்தார்.


கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட போத்தனூர் பகுதியில் உள்ள 95வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் ராஜசேகர் என்பவர், நேதாஜி, அம்பேத்கர், காமராஜர், அறிஞர் அண்ணா வேடம் அணிந்த கலைஞர்களுடன் தேர்தல் அலுவலகத்துக்கு வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். சமூக ஆர்வலரும், விலங்கு உயிரியல் ஆர்வலருமான ராஜசேகர் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் உணவின்றி தவித்த ஆதரவற்றவர்களுக்கு உணவு தந்தும், அமராவதி வனப்பகுதியில் உள்ள குரங்குகளுக்கு கோவையிலிருந்து லாரிகளில் பழங்களை ஏற்றி சென்று உணவாக தந்தும் பசியாற்றியவர்.

நடனக் கலைஞரான இவர் முதல் முறையாக தேர்தலில் களமிறங்கியுள்ளார். நேதாஜி, அண்ணா , அம்பேத்கர், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் கொள்கைகள் மக்கள் மறந்து வருகின்றனர் எனவும், அத்தலைவர்களின் கொள்கைகளை பொதுமக்களிடம் எடுத்துச்சென்று சேவை செய்யவும் வேட்பாளராக களம் இறங்கியுள்ளதாக கூறும் ராஜசேகர், தேர்தலில் வெற்றி பெற்றால் அடிப்படை தேவைகளையும், பெண்களுக்கான திட்டங்களையும் தருவேன் என தெரிவித்திருக்கிறார்.

Continues below advertisement