"போதை இல்லா கோவை" - பொது மக்களுடன் பைக் ஓட்டி கலெக்டர் விழிப்புணர்வு
இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கோவையில் போதைப் பொருட்கள் மற்றும் புகையிலை பயன்பாட்டுக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பிரம்மாண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரடியாக கலந்து கொண்டு, இருசக்கர வாகனம் ஓட்டி விழிப்புணர்வு செய்தது பொதுமக்களிடையே கவனம் ஈர்த்தது.
போதை மற்றும் புகையிலைக்கு எதிராக அரசு சார்பில் தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை, மாவட்ட புகையிலை தடுப்பு பிரிவு ஆகியவற்றின் சார்பில் இந்த போதைக்கு எதிரான இருசக்கர வாகன பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
போதைக்கு எதிராக பைக் பேரணி
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் 270-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் தானும் இருசக்கர வாகனம் ஓட்டி, போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பேரணியில் பங்கேற்றவர்கள் போதை மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் மற்றும் பலூன்களை ஏந்தி சென்றனர். குறிப்பாக கள்ளச்சாரம் மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், குடும்ப சீர்கேடு மற்றும் சமூக பிரச்சனைகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த இருசக்கர வாகன பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதியை முழுவதும் சுற்றி வந்ததுடன், மீண்டும் மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது. போதை இல்லா சமூகத்தை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.























