தொழிற்சாலை ரசாயன கழிவுகள் தாக்கம் – அன்னூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு முடிவு
கோவை அன்னூரில் தொழிற்சாலை கழிவுகளால் பொதுமக்கள் பாதிப்பு – நடவடிக்கை இல்லை என்றால் தேர்தல் புறக்கணிப்பு

கோவை மாவட்டம், அன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட அச்சம்பாளையம் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சுவாசக் கோளாறால் அவதிப்படும் மக்கள்
இந்த பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதே பகுதியில் தனியார் உணவு நிறுவனம் உள்ளிட்ட சில தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுப் புகை மற்றும் ரசாயனம் கலந்த கழிவுத் துகள்களால் அப்பகுதியில் துர்நாற்றம் அதிகமாக வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும், ரசாயனம் கலந்த நச்சுப் புகை மற்றும் இரும்புத் துகள்கள் வீடுகளிலும் உணவுப் பொருட்களிலும் படிந்து வருவதாகவும், இதனால் பலருக்கு சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டு கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் கூறுகின்றனர்.
நடவடிக்கை எடுக்காவிட்டால் வாக்கு இல்லை
இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே, அச்சம்பாளையம் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, உடனடியாக தங்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், இனியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், வரவிருக்கும் தேர்தலை புறக்கணிப்பதோடு, அரசு வழங்கிய அடையாள அட்டைகளையும் திருப்பி அளிக்க முடிவு செய்துள்ளதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.























