நாடாளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடையும் நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கோவை மக்களவை வேட்பாளர் அண்ணாமலை ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பேசி இருக்கும் அண்ணாமலை, “25 நாட்களாக செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு கொடுத்து கொண்டு இருக்கின்றீர்கள். மோடி அவர்கள் பிரதமராக வாக்களிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து இருக்கிறீர்கள். எதிர்க்கட்சியினர் உங்களை ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் , 250 ரூபாய் என ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு கோவை மக்களின் தன்மானத்தை பற்றி தெரியவில்லை.


பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க போகிறார். திராவிட முன்னேற்றக் கழகம் அவர்கள் செய்ய வேண்டிய வேலை எல்லாம், மாநில அரசு செய்ய வேண்டிய வேலை எல்லாம் தேர்தல் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கின்றனர். 33 மாதங்களாக எதுவும்  செய்யாதவர்கள் வரும் காலங்களிலும் செய்யப்போவதில்லை. மாற்றத்தின் பக்கம் நிற்பீர்கள் என நம்புகிறோம். 500 நாட்களில் 100 வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். விவசாயிகள், இல்லத்தரசிகள் , ஏழை தாய்மார்கள், இளைஞர்கள் என அனைவருக்கும் எங்கள் வாக்குறுதியை கொடுக்கிறோம். 500 நாட்களில் 100 வாக்குறுதியை நிறைவேற்றிக் காட்டுவோம். கோவையை புதிய கோவையாக மாற்றிக் காட்டுவோம். நேர்மையான அறம் சார்ந்த அரசியல் கோவையில் இருந்து ஆரம்பமாகும் என்ற நம்பிக்கைக்கு இருக்கிறது.



வாக்களிக்க வேண்டும்


இத்தனை ஆண்டுகளாக ஆளுகின்ற கட்சிகள் ஆண்ட கட்சிகள் கள்ளச்சாராயம், சாராயம், போதைவஸ்துகள் மூலமாக மக்களிடமிருந்து பிழிந்து சம்பாதித்த பணத்தை இப்போது  கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு சிறப்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோரும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும். பிரதமரின் ஒட்டும் கூலித் தொழிலாளியின் ஓட்டும் சமம். ஒவ்வொரு ஓட்டும் ஜனநாயகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. எந்த காரணத்தை கொண்டும் வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள். குறிப்பாக இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்றால், கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். இந்த முறை உங்கள் வாக்கு மிக முக்கியமான வாக்காக இருக்கிறது. கோவை மக்களவை தொகுதியில் 20 லட்சத்தி 83 ஆயிரம் வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும்.


வளமான,  வலிமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் எனில்  வாக்களிக்காமல் இருந்துவிட வேண்டாம். ஒவ்வொரு வாக்கும் முக்கியம். அண்ணாமலையை பிடிக்கும் என்று சொல்லிவிட்டு வாக்களிக்காமல் இருந்தால் அது நன்றாக இருக்காது. 19ம் தேதி 7 மணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பது அன்பார்ந்த வேண்டுகோள். தமிழகத்தின் மறுமலர்ச்சி கோவையில் இருந்து ஆரம்பம் ஆகட்டும். வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். பீளமேடு அருகேயுள்ள பாலன் நகர் பகுதியில் அண்ணாமலை இறுதிக்கட்ட பரப்புரை மேற்கொள்கிறார்.