Annamalai : 'கல்லூரிகளுக்குள் அரசியல் வேண்டாம்’ - பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுரை..!

"கல்லூரிகளுக்குள் முன் அனுமதியில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறினேன்.கல்லூரிகளுக்கு அனுமதி பெற்று செல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட மாணவர் அமைப்பினர் பாஜகவினருடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்"

Continues below advertisement

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சார்பில், நமக்காக நம்ம எம்.எல்.ஏ  என்ற  மக்கள் குறை தீர்க்கும் நடமாடும் சேவை வாகனம் துவக்கப்பட்டுள்ளது. கோவை கெம்பட்டி காலனி பகுதியில் நடைபெற்ற இவ்வாகன துவக்க விழா நிகழ்ச்சியில்,  பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதையடுத்து அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

Continues below advertisement

அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் நடந்த பாஸ்போர்ட் ஊழல் தொடர்பாக வருகின்ற 21 ம் தேதியன்று தமிழக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளோம். இவ்விவகாரத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டது குறித்து ஆதாரபூர்வமாக புகார் அளிக்க உள்ளோம். முதலமைச்சர் தேச பாதுகாப்போடு விளையாடதீர்கள். இந்த விவகாரத்தில் இதுவரை ஒரு சார்ஜ் மெமோ கூட கொடுக்கவில்லை. எந்த ஆட்சியில் நடந்து இருந்தாலும் முதலமைச்சர் முன்னுதாரணமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு கிடைத்த பெருமை. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பங்கேற்பதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மிகப்பிரமாண்டமாக நடத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

திருப்பூர் கல்லூரிகளில் ‘செல்பி வித் அண்ணா’ நிகழ்ச்சிக்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறித்த கேள்விக்கு, ”திருப்பூர் தொண்டர்கள் புதிதாக செய்ய வேண்டும் என அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். அது குறித்து கேள்விப்பட்டதும் கல்லூரிகளுக்குள் முன் அனுமதியில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும் என தொண்டர்களிடம் கூறினேன். கல்லூரிகளுக்கு அனுமதி பெற்று செல்ல வேண்டும். ஒரு குறிப்பிட்ட மாணவர் அமைப்பினர் பாஜகவினருடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர். இது பெரிதுபடுத்த வேண்டிய விசயமல்ல. கல்லூரிக்குள் அரசியல் வேண்டாம் என்பது தான் எனது நிலைப்பாடு. இதுபோன்ற நிகழ்ச்சிகளை பாஜகவினர் இன்னும் கவனமாக செய்ய வேண்டும்” என பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”அதிமுக உட்கட்சி விசயத்தில் பாஜக நுழையாது. பாஜக, அதிமுக உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து தலைவர்களிடமும் நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதிமுக தலைமையை முடிவு அதிகாரம் அக்கட்சியின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தான் உண்டு. தலைமை விவகாரத்தில் அக்கட்சியினரின் முடிவை பாஜக ஏற்றுக் கொள்ளும். அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு இருப்பது குறித்து மத்திய நிதியமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறோம். ஜிஎஸ்டி கவுன்சிலில் ஏகமனதாக இந்த வரி போடப்பட்டது. இதில் அரசியல் செய்வது நன்றாக இருக்காது. இப்பிரச்சனைக்கான தீர்வை பாஜக போராடி கொண்டு வரும்.


தமிழகத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பாக ஊழல் மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளோம். யாரும் எங்கும் தப்பிக்க முடியாது. போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் யாரையோ காப்பற்ற மாநில அரசு செயல்படுகிறது. முறையாக விசாரணை இல்லையெனில், நீதிமன்றத்திற்கு செல்வோம். பொங்கல் தொகுப்பு ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.

ஆளுநரை வம்பு சண்டைக்கு இழுப்பது தான் திமுகவினரின் முழு நேர வேலை. ஆளுநர் செயல்பாட்டில் தவறு என யாரும் சொல்ல முடியாது. அவரை செயல்பாட்டை, பேச்சை திமுகவினர் அரசியலாக்குகின்றனர். மக்களுக்கு திமுக அரசின் மிகப்பெரிய சலிப்பு வந்து விட்டது. அதனை திசை திருப்ப ஆளுநரை வம்புக்கு இழுத்து திமுக அரசியல் செய்கிறது.  தி.க. தலைவர் வீரமணிக்கு சட்ட திட்டம் தெரியுமா என சந்தேகமாக உள்ளது. பெரியார் பல்கலைகழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. முதுகலை வரலாறு கேள்வித்தாளில் 10 வது கேள்வி பெரியாருக்கு யார் பட்டம் கொடுத்தது எனவும், 11 வது கேள்வி சாதி பற்றியும் உள்ளது. ஒரு கையில் பெரியாரையும், மறு கையில் சாதியையும் வைத்துக் கொண்டு திமுக 70 ஆண்டுகளாக அரசியல் செய்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் நடந்த தவறை முதலமைச்சர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். வீரமணி தான் முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

நான் திமுகவினரை வசைபாடவில்லை. திமுக தான் என்னை வசைபாடுகிறது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொய் பிரச்சாரம் செய்கிறது. திமுகவிற்கும், பாஜகவிற்கும் எந்த பகைமையும் கிடையாது. கொள்கைகள் தான் வேறு. திமுகவினர் செய்யும் தவறுகளை மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola