கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் அவர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கோயம்புத்தூர் சிவசக்தி காலனியில் இருசக்கர வாகன பேரணியுடன் வாக்கு சேகரிப்பு தொடங்கியது. இந்த பேரணியை அண்ணாமலை துவக்கி வைத்து, வானதி சீனிவாசனுடன் இணைந்து பொதுமக்களிடம் ஆதரவு கோரினார். பா.ஜ.க, அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கோவையில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக ராமநாதபுரம் காவல் நிலையத்தை பூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டதை மக்கள் கவனித்து வருகிறார்கள் என்றார். மத்திய அரசின் நிதியை முழுமையாக பயன்படுத்தக்கூடிய ஆட்சி தேவைப்படுகின்றது என்றும், அதற்காக வானதி சீனிவாசனுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், தேர்தல் கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாகவும், இன்னும் அந்த அலை முழுமையாக வெளிப்படவில்லை என்றும் கூறினார். தி.மு.க அரசு அராஜக மற்றும் வன்முறை அரசியலை முன்னெடுத்து வருவதாகவும், அதற்கு மக்கள் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பெட்டியில் பதிலளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி குறித்து பேசுகையில், அவர் தனது தவறுகளை ஏற்கவில்லை என்றும், தேர்தல் முடிவில் மக்கள் அவரின் “முகத்திரையை கிழிப்பார்கள்” என கடுமையாக விமர்சித்தார். மேலும், தேர்தல் ஆணையம் கடுமையாக செயல்பட வேண்டும் என்றும், தேவையற்ற நபர்களை மாவட்டத்திலிருந்து வெளியேற்ற நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இறுதியாக, பணம் வழங்கப்பட்டாலும் அது தேர்தல் முடிவை பாதிக்காது என்றும், கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் வெற்றி பெறுவது உறுதி என அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.