கோவை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கட்டமைப்பு : 48 மணிநேரத்தில் நிதி திரட்டிய அமெரிக்க மருத்துவர்
மருத்துவர் ராஜேஷ் ரங்கசாமி - நித்யா மோகன் தம்பதியர் தங்களது ‘ஆர்டர் கார்ப்பரேஷன்’ அறக்கட்டளையின் மூலம் 48 மணிநேரத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி, கோவை மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கட்டமைப்பு உபகரணங்களை வாங்கி அளித்துள்ளனர்.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் உச்சத்தை அடைந்து வருகிறது. கடந்த சில தினங்களாக 3,200-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனைகளை காட்டிலும், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கே அதிகளவில் வருகின்றனர். இதனால் கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதையறிந்த கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவரும், தற்போது அமெரிக்காவின் நவேடா மாகாணத்தில் உள்ள ரினோ நகரில் வசிக்கும், மருத்துவர் ராஜேஷ் ரங்கசாமி - நித்யா மோகன் தம்பதியர் தங்களது ‘ஆர்டர் கார்ப்பரேஷன்’ அறக்கட்டளையின் மூலம் 48 மணிநேரத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டி, கோவை மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் கட்டமைப்பு உபகரணங்களை வாங்கி அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்காவில் வசிக்கும் மருத்துவர் ராஜேஷ் ரங்கசாமி கூறும்போது, ‘‘நான், கடந்த 1992-ஆம் ஆண்டு கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தேன். பின்னர், அகமதாபாத்தில் மருத்துவ மேற்படிப்பு முடித்த நான் தற்போது, அமெரிக்காவின் ரினோ நகரில் உள்ள மருத்துவமனையில் மூளை ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளேன். இங்கு மனைவி நித்யா மோகன், மகள் ரியாவுடன் வசிக்கிறேன். நித்யா மோகன் நவேடா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் அன்ட் பயோ மெடிக்கல் பிரிவு பேராசிரியையாக உள்ளார். என் பெற்றோர் ரங்கசாமி- விஜயலட்சுமி தற்போது மேட்டுப்பாளையத்தில் வசிக்கின்றனர். மனைவி நித்யா மோகனின் பெற்றோர் மோகன் - வாணி மோகன் கோவையில் வசிக்கின்றனர். நானும், மனைவியும் இணைந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் ‘ஆர்டர் கார்ப்பரேஷன்’ அறக்கட்டளையை தொடங்கினோம். நித்யா மோகன் தலைவராகவும், நான் செயலராகவும் உள்ளேன்.
தற்போதைய சூழலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க கோவையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் தேவை என்பதை, கோவையில் மருத்துவராக உள்ள எனது அத்தை வாணி மோகன், கங்கா மருத்துவமனையின் அனஸ்தீசியா துறை நிபுணர் மருத்துவர் பாலவெங்கட் ஆகியோர் மூலம் அறிந்தேன். இதையடுத்து எங்களது அறக்கட்டளை மூலம் நிதி திரட்டி, மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் கட்டமைப்புகளை ஏற்படுத்தி தர முடிவு செய்தோம். கடந்த வாரம் ஒருநாள் நிதி திரட்டும் பணியை தொடங்கினோம். அமெரிக்காவில் உள்ள எங்களது நண்பர்கள், தெரிந்த நபர்கள் உள்ளிட்டோரிடம் செல்போன் , இ-மெயில், வாட்ஸ்-அப், குறுந்தகவல், முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு நான், மனைவி, மருத்துவர் ரவிகுமார், மகள் ரியா ராஜேஷ், ரித்திக் ராஜேஷ், மாணவி செளமியா உள்ளிட்டோர் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டோம். அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு கோடி ரூபாய் தொகை திரட்டப்பட்டது. கோவையிலுள்ள மருத்துவர்கள் பாலவெங்கட், வாணி மோகன் உதவியுடன் ஆக்சிஜன் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் தனியார் நிறுவனத்தை தொடர்பு கொண்டோம். கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும் ஆர்டர் செய்து தொகையை வழங்கினோம். கோவை அரசு மருத்துவமனையில் ரூ.51 லட்சம் மதிப்பில் நிமிடத்துக்கு 200 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தியாகும் கட்டமைப்பு, ரூ.5 லட்சம் மதிப்பில் 5 ஆக்சிஜன் கான்சென்ட்டிரேட்டர்கள், இஎஸ்ஐ மருத்துவமனையில் ரூ.27 லட்சம் மதிப்பில் நிமிடத்துக்கு 100 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தியாகும் கட்டமைப்பு, ரூ.3 லட்சம் மதிப்பில் படுக்கை வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. மற்றவர்களுக்கு உதவும் போது கிடைக்கும் மகிழ்ச்சி விலைமதிப்பற்றது. அதன் அடிப்படையிலேயே நாங்கள் எங்களால் இயன்ற உதவியை மேற்கண்ட மருத்துவமனைகளுக்கு செய்து தந்துள்ளோம். இதற்கு கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை நிர்வாகத்தினரும் தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்” என அவர் கூறினார்.
கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறும்போது, ’ஆர்டர் கார்ப்பரேஷன்’ அறக்கட்டளை அமைப்பினர் ஏற்படுத்திக் கொடுத்த ஆக்சிஜன் கட்டமைப்பு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதன் மூலம் 40 படுக்கைகளில் உள்ள கொரோனா நோயாளிகள் பயன் பெறுகின்றனர் என்றார். மக்களின் உயிர் காக்க உதவி செய்த மருத்துவர் ராஜேஷ் ரங்கசாமிக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.