அண்ணாமலையின் பரப்புரை வாகனத்தை சிறைபிடித்து அதிமுக வேட்பாளர் போராட்டம்

பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையின் பரப்புரை வாகனத்தை சிறைப்பிடித்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகளால் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

கோவை  மாவட்டம் சூலூர் அருகே பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலையின் பரப்புரை வாகனத்தை சிறைப்பிடித்து அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகளால் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Continues below advertisement

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இன்று பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். இதேபோல திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பல்லடம் பகுதியிலும், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சூலூர் பகுதியிலும் என  புறநகர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனிடையே  சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாதப்பூர் ஊராட்சியில் தொட்டிபாளையம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட பாஜகவினருக்கு பிற்பகலிலும், அதிமுகவினருக்கு மாலையிலும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் சூலூர் எம்.எல்.ஏ கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் குறித்த நேரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாகனத்தை சிறைபிடித்து போராட்டம்

அப்போது அதே பகுதியில் பிரச்சாரத்துக்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொள்ளும் வாகனம் வந்தது. மாநில தலைவர் அண்ணாமலை வேறு வாகனத்தில் வந்த நிலையில், பரப்புரை வாகனம் மட்டும் தனியாக வந்தது. அதிமுகவினர் பரப்புரை மேற்கொண்டு இருந்த நிலையில், பா.ஜ.க பரப்புரை வாகனம் மேற்கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் ஒரு இடத்தில் அதிமுகவினரின் வாகனங்களை ஓவர் டேக் செய்து பா.ஜ.க.வின் பரப்புரை வாகனம் முன்னால் செல்ல முயன்றது. அப்போது லேசாக அதிமுகவினரின் வாகனத்தில் உரசியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த அதிமுக மற்றும் பாஜக ஆகிய இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பரப்புரை வாகனத்தில் இருந்து இறங்கிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் மற்றும் எம்.எல்.ஏ கந்தசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலையின் பரப்புரை வாகனத்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.


தாங்கள் சரியான நேரத்தில் பிரச்சாரத்திற்கு வந்துள்ளதாகவும், பாஜக தரப்பு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து மாதப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரத்திற்கு காவல் துறையினர் அனுமதித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர். உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போக செய்தனர். அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்ட நிலையில், அதிமுக வேட்பாளர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை சிறைபிடித்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர் இப்ராஹீம் கைது

இதேபோல கோவை இடையர்பாளையம் பகுதியில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராஹிம் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக வருகை தந்தார். அப்போது அங்கு வந்த போலீசாரும் தேர்தல் பறக்கும் படையினரும் உரிய அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தினர். இதனால் போலீசாருடன் வேலூர் இப்ராஹிம் மற்றும் பாஜகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்து கிளம்பி செல்வதாக கூறிய வேலூர் இப்ராஹிமும், பாஜகவினரும் அருகாமையில் உள்ள கடைகளுக்கு சென்று சிறு சிறு பொருட்களை விலைக்கு வாங்கி அங்கு இருந்த பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனர். இதனிடையே அனுமதியின்றி பிரச்சாரம் மேற்கொண்டதாக வேலூர் இப்ராஹிம் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரை கைது செய்த போது பாஜகவினர் சிலர் போலீஸ் வாகனத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அனைவரையும் அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.

Continues below advertisement