நடிகர் ரஞ்சித் நடித்து இயக்கியுள்ள குழந்தை c/o கவுண்டம்பாளையம் என்ற படத்தின் டிரைலர் இன்று கோவையில் வெளியிடப்பட்டது. இது சாதி ரீதியான படம் அல்ல எனவும், சமூக நீதிக்கான படம் என நடிகர் ரஞ்சித் தெரிவித்தார்.
கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள பிரிவியூ ஸ்டுடியோவில் நடந்த நிகழ்ச்சியில், குழந்தை c/o கவுண்டம்பாளையம் படத்தின் 30 செகண்ட் டிரைலரை, நடிகர் ரஞ்சித் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தனது சினிமா வாழ்க்கை கோவையில் இருந்து தான் தொடங்கியதாகவும், எனவே தான் இந்த படத்தை கோவையில் ட்ரெய்லர் வெளியிடுவதாக கூறினார். எட்டு வருடங்களுக்குப் பின் தான் நடித்து இயக்கியுள்ள இந்த படத்தின் கரு கடந்த 20 ஆண்டு கால மக்களின் சமூக பிரச்சனையை சிந்தனையில் கொண்டு தயாரிக்கப்பட்டது என்றார். முழுக்க கொங்கு மண்டல பகுதி சேர்ந்தவர்களை வைத்து மட்டுமே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது" என்றார். புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இமான் அண்ணாச்சி மட்டுமே இப்பகுதியை சாராத ஒரே நபர் என்றார். சிறிய படங்களுக்கு யாரும் அங்கீகாரம் கொடுப்பதில்லை என வேதனைப்பட்ட ரஞ்சித், சினிமா வாழ்க்கை என்பது மரண படுக்கையாகவே உள்ளது என்றார்.பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்கு மட்டுமே திரையரங்கிற்கு ரசிகர்கள் வரும் நிலை மாறி, இந்த படத்திற்கு மக்கள் ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நாடகக் காதலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த கொங்கு மண்டல படம், வாழ்க்கையின் பல சம்பவங்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்றார். இந்த படம் ஜாதி, மத ரீதியான படம் அல்லாமல் சமூக நீதிக்கான படமாக இருக்கும் என தெரிவித்தார். தமிழக சினிமா துறை தொடங்கியது கோவையில் தான் என குறிப்பிட்ட அவர், தமிழ் சினிமாவின் தொடக்கமே. கோவையில் உள்ள பட்சி ராஜா ஸ்டுடியோவில் இருந்து தான் தொடங்கியது என்றார். தொடக்க காலங்களில் பட்சி ராஜா ஸ்டுடியோவில் தான் அதிகமான பல படங்கள் படமாக்கப்பட்டது எனக் கூறிய அவர், வரும் காலத்தில் கோவையில் சினிமா தயாரிப்புக்கான பெரிய ஸ்டுடியோ ஒன்றை கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பிப்ரவரி 14-ஆம் தேதி இந்த படம் திரையரங்கில் திரையிட திட்டமிட்டு இருப்பதாக கூறிய அவர், படம் முழுக்க முழுக்க அனைத்து நண்பர்களின் ஒத்துழைப்புடன் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது என்றார்.