கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம்  பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதியன்று பள்ளி விடுமுறை என்பதால் அச்சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலைக்கு சென்று இருந்த அவரது தாயார் மாலை வந்து பார்த்த போது, அச்சிறுமி வீட்டில் இல்லை என்பது தெரிந்தது. பின்னர் சிறுமியின் செல்போனுக்கு அவர் அழைத்த போது, சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் தோழிகள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்த போது, சிறுமி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. பின்னர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.




இதனை தொடர்ந்து தனது மகளை காணவில்லை என அவரது தாய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மாணவியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மாணவியின் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய முட்புதர் ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக துப்புரவு பணியாளர்களுக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன் பேரில் பணியாளர்கள் அங்கு வந்து பார்த்த போது, முட்புதரில் கை கால்கள், கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில், மூட்டையில்  பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல் துறையினர் நடத்திய சோதனையில் அது மாயமான சிறுமியின் உடல் என்பது தெரியவந்தது. 


இதை தொடர்ந்து சடலத்தை மீட்ட காவல் துறையினர் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கில் அவரது குடும்ப நண்பரான முத்துக்குமார் என்பரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மாணவியின் தாயாருக்கும், முத்துக்குமாருக்கும் நகை, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்துள்ளது. இந்த நகை, பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் மாணவியை கொலை செய்து விட்டு, வேறொரு நபருடன் உடன் சென்றதாக நாடகமாட திட்டமிட்டது தெரியவந்தது. 





இதையடுத்து முத்துக்குமார் மீது ஆதாயக்கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும்  மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்ததை அடுத்து முத்துக்குமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சிறையில் உள்ள முத்துக்குமார் மீது குண்டர் சட்டத்தில் தடுப்புக் காவலில் அடைக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவினை சிறையில் உள்ள முத்துக்குமாரிடம் காவல் துறையினர் வழங்கினர்.