கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வருகின்ற 11ம் தேதி பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்ட துவக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவருடன் அமைச்சர் முத்துசாமி, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் பங்கேற்றனர். இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “வருகின்ற 11 ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பில்லூர் 3வது திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். சிறுவாணியில் இருந்து வரும் தண்ணீர் அளவு குறைந்து விட்டது. இதனால் வாரம் ஒரு முறை, 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்கும் நிலை இருக்கிறது. பில்லூர் 3 திட்டத்தை துவங்கினால் கோவை மக்களுக்கு தினமும் தண்ணீர் கொடுக்க முடியும். கோவையில் உள்ள 22 லட்சம் மக்களுக்கும் 300 எம்.எல்.டி தண்ணீர் இருந்தால் தினமும் கொடுக்க முடியும். முதல்வர் உத்தரவின்படி இந்த திட்டத்தை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் கொண்டு வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசுகையில், “தேசிய பேரிடர் நிவாரணத்திற்கும், மாநில பேரிடர் நிவாரணத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் பா.ஜ.கவினர் குழப்பிக்கொண்டு இருக்கின்றனர். கவுண்டமணி வாழைப்பழக் கதை மாதிரி பேசுகின்றனர். எனக்கு என்ன தகுதி இருக்கின்றது என பேச எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கியதை இல்லை. நான் அந்த வார்த்தை பயன்படுத்தியதற்கு பதிலாக, வேறு வார்த்தை பயன்படுத்திருக்க வேண்டும் என்று சொன்னால் அவரிடம் திரும்பி கேட்கின்றேன். உங்கள் கேபினட்டில் இருந்த ஒரு அமைச்சர், முதல்வர், கலைஞர், முதல்வரின் குடும்பத்தினரை அவதூறாக பேசி உயர்நீதிமன்றத்தில் இரு வழக்கு இருக்கின்றது. அதற்கு பின்னர் ஒரு பெரிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்ற பெயரில் முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்தினீர்கள். இதற்கெல்லாம் வருத்தம் தெரிவித்து விட்டு, பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் வருத்தம் தெரிவித்து திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கின்றேன். எம்ஜிஆர் முகத்தை வைத்து திமுக ஆட்சிக்கு வந்ததாக கூறுவது குறித்த கேள்விக்கு, அது தனி கதை அதை தனியாக பேசுவோம். அதற்கு வருத்தம் தெரிவித்து பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால், நானும் செய்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக சூலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, “நாளை மறுநாள் கோவையில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளோம். கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வியூகம் என்பது ரகசியமாக இருக்க வேண்டும். தேர்தலில் வாக்குறுதி அளிக்க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நாளை திருப்பூர், கோவைக்கு வருகிறார்கள். ஒன்றிய அரசிடம் எதை எல்லாம் வாங்க வேண்டும் என கேட்டறிய உள்ளனர். நாங்கள் கருத்து திணிக்கவில்லை. மக்கள் எங்களுக்கு சாதகமாக உள்ளதை கருத்து கணிப்பு காட்டுகிறது. அந்த அளவு முதலமைச்சர் உழைக்கிறார். மக்களின் எண்ண ஓட்டத்தை கருத்து கணிப்புகளாக வெளியிடப்படுகிறது. அத்திக்கடவு அவிநாசி பணிகள் முடிவடைந்த பிறகும் சில பணிகள் நிறைவு பெறாமல் இருந்து வருகிறது. தாமதம் ஏற்பட காரணமே நிலம் எடுக்க விவசாயிகள் ஒப்புதல் அளிக்காததது தான். விவசாயிகளிடம் பேசிய நிலம் பெற்று திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். அத்திக்கடவு அவினாசி திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்” என தெரிவித்தார்.