சென்னையில் கஞ்சா , வலி நிவாரணி மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர்கள் !! பின்னணி என்ன ?
சென்னை தரமணி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் தரமணி 100 அடி சாலை நடைமேடை பாலம் அருகே கண்காணித்து அங்கு இருசக்கர வாகனங்களில் நின்று கொண்டிருந்த 4 நபர்களை விசாரணை செய்து அவர்களை சோதனை செய்த போது, அவர்கள் உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா போதைப் பொருளை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அதன் பேரில் , தரமணி காவல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் கஞ்சா வைத்திருந்த எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த லோகேஷ் ( வயது 24 ) , தரமணியை சேர்ந்த விக்கி ( வயது 27 ) மற்றும் லோகநாதன் ( வயது 19 ) , பெருங்குடியை சேர்ந்த நித்யானந்தம் ( வயது 19 ) ஆகிய நால்வரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 எண்ணிக்கைகள் கொண்ட Nitrazepam உடல்வலி நிவாரண மாத்திரைகள், 2 கிலோ கஞ்சா, மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் எதிரி லோகேஷ்வரன் ஆட்டோ ஓட்டுநராக உள்ளதும், நித்தியானந்தம் விஷுவல் கம்யூனிகேசன் படித்து வருவதும் , லோகநாதன் டிப்ளமோ படித்து வருவதும், ஆந்திராவிலிருந்து உடல் வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வந்து சென்னையில் விற்பனை செய்தது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 4 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தங்க நகை தயார் செய்யும் பட்டறையில் தங்க நகைகளை திருடிச் சென்ற 3 ஊழியர்கள் உட்பட 4 நபர்கள் ஒடிசாவில் கைது. 258 கிராம் தங்க நகைகள் மீட்பு.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வசித்து வரும் அரிஷ் ( வயது 35 ) என்பவர் பழைய வண்ணாரப்பேட்டை முத்தையா முதலி தெருவில் தங்க நகைகள் தயார் செய்யும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் வேலை செய்து வரும் கார்த்திக்பேரா என்பவரிடம் அரிஷ் கடந்த 07.11.2025 அன்று தங்க கட்டிகள் மற்றும் தங்க நகைகளை கொடுத்து, அதை உருக்கி புதிய டிசைன் நகைகளாக செய்து தருமாறு கூறியுள்ளார்.
பின்னர் கார்த்திக்பேரா கடந்த 10.11.2025 அன்று புதிதாக தயார் செய்த டிசைன் தங்க நகைகளை கொடுத்ததாகவும், மீதம் உள்ள சுமார் 1781 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை கார்த்திக்பேரா மற்றும் அவரது நண்பர்கள் திருடிக் கொண்டு, கடந்த 11.11.2025 அன்று முதல் தலைமறைவாகி விட்டதாகவும், தங்க நகைகளை திருடிச் சென்ற நபர்களை கைது செய்து, தங்க நகைகளை மீட்டு தரும்படி அரிஷ் என்பவர், கொருக்குப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்தார்.
புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொருக்குப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மேற்படி தங்க நகைகளை திருடிச் சென்ற ஊழியர்கள் மேற்கு வங்காளம் பகுதியை சேர்ந்த கார்த்திக்பேரா ( வயது 42 ) மற்றும் பபான்ராய் ( வயது 29 ) மற்றும் நாரயண்மைடி ( வயது 19 ) மற்றும் திருட்டு நகைகளை வாங்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் சந்திரா பிரதன் ( வயது 42 ) ஆகிய 4 நபர்களை ஒடிசா மாநிலத்தில் வைத்து கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து திருடப்பட்ட 258 கிராம் எடை கொண்ட தங்கநகைகள் மீட்கப்பட்டது. திருட்டு வழக்கில் தொடர்புடைய மற்ற தலைமறைவான குற்றவாளிகளை பிடிக்க காவல் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.