சென்னை ; வீட்டில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர் கைது ! தப்பி ஓடியவருக்கு மாவு கட்டு- நடந்தது என்ன ?
சென்னையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டில் கஞ்சா செடி வளர்த்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞர் உட்பட இரண்டு பேர் கைது
சென்னை கொடுங்கையூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவர்களது தனிப்படை போலீசார் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 99 வது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்தனர்.
அப்போது அந்த வீட்டில் 25 பாக்கெட்களில் சிறிய அளவில் கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து கஞ்சா பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த வெங்கடேஷ் ( வயது 21 ) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த வீட்டை சோதனை செய்த போது அந்த வீட்டில் ஒரு அடி அளவிலான கஞ்சா செடி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் அதனையும் பறிமுதல் செய்து , பிடிபட்ட நபரை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தியதில் கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த முகமது முஜ்மில் ( வயது 24 ) என்ற நபரிடம் இருந்து வெங்கடேஷ் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு 6000 ரூபாய் கொடுத்து கஞ்சாவை வாங்கி அதை சிறிய பொட்டலங்களாக பிரித்து 250 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து முகமது முஜ்மில் என்ற நபரையும் கொடுங்கையூர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இவர்கள் இருவரிடமும் கொடுங்கையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஓட்டேரியில் இரண்டு கஞ்சா வியாபாரிகள் கைது.
சென்னை ஓட்டேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பணத்தோப்பு ரயில்வே காலனி பகுதியில் ஓட்டேரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது போலீசாரை பார்த்து இரண்டு பேர் ஓடியுள்ளனர். அவர்களை பிடிக்க முற்பட்ட போது கீழே விழுந்ததில் கொளத்தூர் சிவசக்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்கின்ற பாக்சர் ஆனந்த் ( வயது 30 ) என்ற நபருக்கு வலது கால் உடைந்தது.
போலீசார் அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவு கட்டு போட்டனர். மேலும் மற்றொரு நபரான ஓட்டேரி ஐதர் கார்டன் பகுதியை சேர்ந்த வெற்றி வேல் ( வயது 34 ) என்ற நபரையும் கைது செய்தனர். இவர்கள் இருவரும் கஞ்சா வியாபாரிகள் என்பதும் தொடர்ந்து பாக்சர் ஆனந்த் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.





















