Chennai: ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு பெண் மருத்துவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திடீர் மரணங்கள்:
சமீப காலமாக இளைஞர்களுக்கிடையே ஏற்படும் திடீர் மரணங்கள் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த சில காலமாகவே இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு சம்பவங்கள் ஏற்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக கொரோனா பாதிப்பிற்கு பிறகு இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்தது. வழக்கம் போல் வேலை செய்யும் இளைஞர்கள் திடீரென மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பால் பெண் மருத்துவர் உயிரிழப்பு
சென்னை கீழ்ப்பாகத்தைச் சேர்ந்தவர் அன்விதா (24). இவர் தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது தந்தை பிரவீன் கண் மருத்துவராக உள்ளார். இளம்பெண் அன்விதா உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சிக்காக செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று இரவு 7.30 மணிளவில் அன்விதா உடற்பயிற்சி மையத்திற்கு உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுள்ளார்.
உள்ளே சென்ற அவர், வார்ம் அப் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது, அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த ஒரு மருத்துவர் முதல் சிகிச்சை அளித்தார். அதன் பலன் அளிக்காததால், அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அன்விதாவை கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, பரிதாபமாக அன்விதா உயிரிழந்துள்ளார். உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளம்பெண்ணின் உடலை அவரது தந்தை மற்றும் அவரது உறவினர்கள் பெற்றுச் சென்றனர். பின்னர், இன்று மாலை அன்விதாவின் குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்து உடலை நல்லடக்கம் செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரடைப்பு ஏற்பட்டு இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன காரணம்?
சமீபத்தில், இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள மரணங்களுக்கும், கொரோனா தடுப்பூசிக்கும் இருக்கும் தொடர்பு குறித்து மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியிருந்தது. திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி தான் காரணம் என்று பலரும் கூறி வந்த நிலையில், ஐசிஎம்ஆர் ஆய்வு நடத்தியது. அதில், கொரோனா தடுப்பூசி இளைஞர்களின் திடீர் மரணங்களின் அபாயத்தை அதிகரிக்காது.
மாறாக, இளைஞர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சின் செலுத்திக் கொண்டால் திடீர் மரணங்கள் குறைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தீவிர கொரோன தொற்று, ஏற்கனவே குடும்பத்தில் இதுபோன்ற மரணங்கள் ஏற்பட்டது, இறப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், தீவிர உடற்பயிற்சி செய்தல், வாழ்க்கை முறை சூழல்கள் ஆகியவை தான் திடீர் மரணங்களுக்கு காரணம் ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.