Chennai Doctor Stabbed: சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி என்பவர் கத்திக்குத்துக்கு ஆளாகி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்டோர் தற்காலிக வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது தமிழ்நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.
யார் இந்த மருத்துவர் பாலாஜி ?
இந்நிலையில், கத்திக்குத்துப்பட்ட மருத்துவர் பாலாஜி குறித்து மற்றொரு மருத்துவரான சிவபாலன் இளங்கோவன் என்பவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், ”டாக்டர். பாலாஜி அவர்கள் மிகவும் நேர்மையான மருத்துவர். ஓமாந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அவர் பணி புரிந்தபோது, அங்கு அவர் மட்டுமே ஒரே ஒரு Medical Oncologist. சரியாக காலை 8 மணிக்கு வந்துவிடுவார், மாலை செல்வதற்குள் நூறு நோயாளிகள் வரை பார்த்திருப்பார். ஒரே நாளில் எண்பதில் இருந்து நூறு நோயாளிகள் அதுவும் Oncology ல் பார்ப்பது அத்தனை எளிதானதல்ல. ஒரே ஒரு மருத்துவர் என்பதால் விடுப்பும் எடுக்க மாட்டார், அத்தனை பொறுப்பான மருத்துவர்” என்று அவரைப்பற்றி சிவபாலன் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.
அரசு மருத்துவமனையில் மருத்துவ பற்றாக்குறை?
மேலும், மருத்துவ துறையில் சமீபகாலமாக மிகவும் அதிகமாக மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்த குறையை மூடி மறைக்க அரசு மருத்துவர்கள் மீதே நடவடிக்கை எடுத்து கவனத்தை திருப்பி விடுகிறது அரசு என அவர் குறிப்பிட்டுள்ளார். அதோடு, மக்களும் இதை அறியாமல் மருத்துவர்கள் மீது வன்முறையில் இறங்குகிறார்கள் என்றும் தெரிவித்துள்ள சிவபாலன் இளங்கோவன், தமிழக மருத்துவத்துறையின் கட்டமைப்பை பாதுகாப்பதற்கான கடைசி எச்சரிக்கையாக இந்த சம்பவத்தை பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்டு, சுகாதாரத்துறை இனியாவது விழித்துக்கொண்டு மருத்துவத்துறையின் போதாமைகளை சரி செய்ய வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.