பிரசவ வலி
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா களியாம்பூண்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்திரன்- ரேவதி தம்பதியினர். கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக ரேவதி மீண்டும் கர்ப்பமானார். இந்நிலையில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென ரேவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. பிரசவ வலியால் துடித்த ரேவதியை அருகில் உள்ள களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதித்துள்ளனர். மருத்துவர் சரண்ராஜ், செவிலியர் பிருந்தா ஆகியோர் ரேவதியை பரிசோதித்து பிரசவம் பார்த்து உள்ளனர்.
வதந்தி
பின்னர் காலை 10.15 மணி அளவில் ரேவதிக்கு அழகான 2.900 கிலோ கிராம் எடையுள்ள அழகான ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த உடன் திடீரென "நான் வந்துட்டேன்" என பேசியதாகவும், குழந்தை பேசியதை மருத்துவர், மற்றும் செவிலியர், தூய்மை பணியாளர், தாயின் உறவினர் ஆகியோருக்கும் கேட்டதாக பரபரப்பாக ஒரு தகவல் பரவி வருகிறது. பிறந்த குழந்தை பேசியதை கேட்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்ததாகவும், மேலும் பிரசவ அறை அருகே யாராவது நின்று இருக்கிறார்களா என்று பார்த்தபோது யாரும் இல்லாததும் திடீரென இக்குரல் கேட்டதும் அதிர்ச்சியும் ஆனந்தம் அடைந்ததாகவும், இந்த செய்தியை கேள்விப்பட்டதும் கிராமம் முழுவதும் உள்ள ரேவதியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களும் ஆச்சரியத்துடன் மருத்துவமனைக்கு வந்து குழந்தையை பார்த்து சென்றுள்ளனர்.
மருத்துவ ரீதியாக தவறு..
இதுகுறித்து உண்மை நிலை அறிவதற்காக ஏபிபி நாடு சார்பில் மாவட்ட சுகாதார அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசியபொழுது, இது போன்று குழந்தை பிறந்த உடனே பேசுவதற்கு எந்த வகையிலும் சாத்திய கூறுகள் இல்லை என தெரிவித்தனர். குழந்தைகள் பேசுவதற்கு நிச்சயம் பல மாதங்கள் எடுத்துக்கொள்ளும் எனவும் இது போன்ற வதந்திகள் பரவுவது மிகத்தவறு எனவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து மருத்துவ துறையில் அனுபவம் வாய்ந்த சென்னையை சேர்ந்த மருத்துவர் குமார் இடம் தொடர்பு கொண்டு பேசியபோது , ”ஒரு குழந்தை பிறந்த உடனே பேசுவதற்கு எந்தவித அறிவியல்பூர்வமான சான்று கிடையாது. முதலில் குழந்தை பேச வேண்டும் என்றால் குழந்தைக்கு நன்கு காதுகள் கேட்க வேண்டும், சுற்றுவட்டாரத்தில் மனிதர்களால் பேசப்படும் வார்த்தைகளில் உள்வாங்கி ஒரு சில எழுத்துக்களை பேசுவதற்கு கூட பத்து மாதங்கள் எடுத்துக்கொள்ளும், முழுமையாக ஒரு குழந்தை பேசுவதற்கு 18 மாதங்கள் வரை தேவைப்படலாம். தமிழர் தம்பதிக்கு பிறக்கும் குழந்தையை, எடுத்துச் சென்று ஆங்கிலம் பேசும் தம்பதிகள் இருவர் வளர்த்தால் அந்தக் குழந்தை ஆங்கிலம்தான் பேசும், சுற்றுவட்டாரத்தில் நாம் பேசுவதை உணர்ந்த பிறகு தான் குழந்தைக்கு பேச வரும், குழந்தை பிறந்த உடனே பேசினார்கள் என அவர்கள் நம்புவது எந்த விதத்திலும் அறிவியல் பூர்வமாக உண்மை கிடையாது” என தெரிவித்தார்