தங்கள் கிராமத்தில் உள்ள சுடுகாட்டு பகுதிக்கு பாதை வசதி கேட்டு , விக்கிரவாண்டி அருகே உள்ள சிறுவை கிராமத்தை சேர்ந்த கிராமத்தினர் நூதன போராட்டம் ஒன்று நடத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது .


சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதை அமைத்து தர வேண்டும் என்ற தங்களது 100 வருட கோரிக்கையை முன்னிறுத்தி போராடி வரும் சிறுவை கிராம மக்கள் , மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு போலியானஒத்திகை  இறுதி சடங்கை நடத்தியுள்ளனர் .



வைக்கோல்களை கொண்டு பிண வடிவில் ஒரு உருவத்தை தயார் செய்த  சிறுவை கிராம மக்கள், அதனை தென்னங்கீற்றில் செய்த பாடையை கொண்டு சிறுவை கிராம சாலை வரை சுமந்து சென்று சாலையிலே வைத்து தகனம் செய்வது போல் போராட்டம் செய்தனர் . இந்த போராட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவை செய்துள்ளனர் .


விழுப்புரம் மாவட்டம் வானூர்  ஒன்றியத்துக்கு உட்பட்டது சிறுவை கிராமம். இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர் . சிறுவை கிராமத்தில் உள்ள மையானத்திற்கு செல்வதற்கு உரிய பாதை இல்லாததால் கடந்த 100  ஆண்டுகாலமாக அவதி பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர் .


இது தொடர்பாக செல்வதுரை (65 ) சிறுவை கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் கூறும் பொழுது , ‛‛எங்கள் கிராமத்தில் இருந்து 750  மீட்டர் தொலைவில் உள்ள விவசாய நிலப்பகுதியின் மத்தியில் எங்கள் கிராமத்திற்க்கான சுடுகாடு சுமார் 100 ஆண்டு காலமாக இருந்து வருகிறது . இறந்தவரின் உடல்களை எரிப்பதற்கு மற்றும் புதைப்பதற்கும் பல தலைமுறைகளாக இந்த பகுதியை தான் பயன் படுத்தி வருகின்றோம்  .



பட்டா நிலங்களுக்கு நடுவில் எங்களது சுடுகாடு அமைந்துள்ளதால் விளைச்சல் மற்றும் அறுவடை நேரத்தில் இறந்தவரின் சடலங்களை எடுத்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றோம் .


சுடுகாட்டை சென்றைடைவதற்கு கிராமத்தில் உள்ள 16  விவசாயிகளின் விளைநிலங்களை தாண்டி செல்ல வேண்டிய சூழ்நிலை இருப்பதால் . அறுவடை நேரங்களில் , பயிர்களை சேதப்படுத்தியும் , கால்முட்டி உயர அளவு வரை தேங்கி நிற்கும் சகதிகளில் இறந்தவரின்  சடலங்களை பாடை மூலம்  தலை மீது  சுமந்து செல்ல வேண்டிய நிலை நிலவிவருகிறது .


எனினும் பல கட்ட போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர்  , கிராமத்தில் உள்ள 15  விவசாயிகள் சுடுகாட்டுக்கு செல்ல பாதை தருவதாக ஒப்பு கொண்டனர் . ஆனால் ஒரே ஒரு குடும்பத்தினர் மட்டும் சுடுகாட்டுக்கு பாதை தராமல் தங்களது வரப்புகளை பலப்படுத்தியும் , சுடுகாட்டுக்கு செல்லும் சடலங்களுக்கு தேவையான பாதையை தராமலும் முரண்டு பிடித்து வருகின்றனர் .



இந்த நிலையில் சென்ற வாரம் துரைசாமி (42 ) என்ற விவசாயி , கொரோனா நோய் தொற்றால் பரிதாபமாக  உயிர் இழந்தார் . சுடுகாட்டுக்கு பாதை இல்லாத சூழ்நிலையில் , அங்கு அமரர் ஊர்தி வாகனமோ அல்லது மற்ற வாகனமோ செல்ல முடியாத நிலையில் அவரது சடலத்தை தலைமீது சுமந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது . 


துரைசாமி கொரோனா தொற்று காரணமாக இறந்ததால் கிராமத்தினர் அவரது சடலத்தை தலையில் சுமந்து செல்ல தயக்கம் காட்டினார் . பின்பு அவருடைய நெருங்கிய குடும்பத்தினர் உதவி உடன் அவரது உடல் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்ய பட்டது .



கொரோனா நோய் பரவல் மற்றும் அதன் தீவிரத்தால் நிகழும்  மரணங்கள் அதிகரித்து வரும் காலகட்டத்தில் , தங்களது சுடுகாட்டுக்கு பாதை ஏற்படுத்தி கொடுத்தால் , அமரர் ஊர்திகளில் மூலம் இறந்தவரின் சடலங்களை பாதுகாப்பாக  இறுதி மரியாதையை செலுத்த முடியும் என்றும் தெரிவித்தார் .


தங்களுக்கு உடனடியாக சுடுகாடு பாதை வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ள  சிறுவை கிராம மக்கள் . தங்களது கோரிக்கையை உடனடியாக செயல் படுத்த தவறும் பட்சத்தில் இனி கிராமத்தில் நடக்கும் கொரோனா உள்ளிட்ட எந்த ஒரு மரணம் நிகழ்ந்தாலும் சாலையில் வைத்து தான் தகனம் செய்வோம் என்ற எச்சரிக்கையும் விடுத்துள்ளனர் .