சென்னை புறநகரான பல்லாவரம் பகுதியில் வெள்ளிக்கிழமைதோறும் புகழ்பெற்ற வார சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் பழைய காலத்து நாணயங்கள் முதல் பறவைகள் என அனைத்து விதமான பொருட்களும் விற்பனைக்கே வைக்கப்பட்டிருக்கும். இதை பார்ப்பதற்காகவே ஏராளமானோர் இங்கு வந்து பாா்த்துவிட்டு, தங்களுக்கு தேவையான  பொருட்களை  வாங்கி செல்வது வாடிக்கையான விஷயம். 



 

இதுபோல் இன்று காலை 7 மணி முதல் பல்லாவரம் சந்தை திறக்கப்பட்டு பொது மக்கள் வரத் தொடங்கினா். அதிலும் தற்போது கொரோனா வைரஸ் 3 அலைகளும் ஓய்ந்து,சகஜநிலை திரும்பியுள்ளதால் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது.  இந்நிலையில் பிரபல கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி இன்று காலை வார சந்தைக்கு வருகை தந்து, அங்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை பார்வையிட்டு வந்துள்ளார். பூச்செடிகள் அடங்கிய நா்சரி பகுதியில் செடிகளை பாா்த்தபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி இவர் வைத்திருந்த ரூ.1.5 லட்சம் மதிப்புடைய  விலை உயர்ந்த மொபைல் போனை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனா். செல்போன் தொலைந்து விட்டது என்பதை தெரிந்து கொண்ட புஷ்பவனம் குப்புசாமி தனது நம்பருக்கு போன் செய்து பார்த்தபோது போன் சுவிட்ச் ஆஃப் என வந்துள்ளது. 

 



 

உடனடியாக புஷ்பவனம்  குப்புசாமி  பல்லாவரம் போலீசில் நிலையம் வந்து  புகார் செய்தாா். போலீசாா் புகாரை வாங்கிக்கொண்டனரே தவிர, வழக்குப்பதிவு செய்து ரசீது எதுவும் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அடுத்தடுத்து மேலும் சிலா் தங்களுடைய செல்போன்கள், பல்லாவரம் சந்தையில் காணாமல் போயவிட்டது என்று பல்லாவரம் போலீஸ்நிலையம் வந்தனா்.



 

இவ்வாறு அடுத்தடுத்து 7 போ்கள் செல்போன்களை காணவில்லை என்று வந்தனா்.ஆனால் போலீசாா் அவா்களிடம் புகாா்களை வாங்காமல், முகவரிகளை மட்டும் வாங்கிக்கொண்டு, அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ஒரே நாளில் பல்லாவரம் சந்தையில் பாடகா் புஷ்பவனம் குப்புசாமி உட்பட 8 போ்கள் செல்போன்கள் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு கவா்னா் நேற்று  பொத்தேரியில் உள்ள தனியாா் கல்லூரி நிகழச்சிக்கு பல்லாவரம் வழியாக சென்றாா். இதையடுத்து அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் பல்லாவரம் போலீசாா் பலா் கவா்னா் பாதுகாப்பிற்கு சென்றுவிட்டனா். இதனால் பல்லாவரம் சந்தைக்கு போதிய போலீசாா் பாதுகாப்பிற்கு செல்லவில்லை.  இதுவும் செல்போன் திருட்டுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.