ஒரே நேரத்தில் ஒரே பல்கலைக்கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலோ இரண்டு முழுநேரப் படிப்புகளைப் படிக்கலாம் என்று  யுஜிசி தெரிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. 


முன்னதாக ஒரு மாணவரால் ஒரு நேரத்தில் ஒரு முழு நேரப் படிப்பை மட்டுமே படிக்க முடியும். வேண்டுமெனில் ஆன்லைன்/ குறுகிய கால / டிப்ளமோ படிப்புகளைப் படிக்க மட்டுமே யுஜிசி அனுமதி வழங்கி இருந்தது. 


இந்த சூழலில் அண்மையில் யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் வெளியிட்ட அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் படிப்புகளுக்கும் புதிய அறிவிப்பு பொருந்தும் என்று தெரிவித்தார். இதுகுறித்துப் பேசிய அவர், ''முன்னதாக மார்ச் 31ஆம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில், இதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டன. புதிய கல்விக் கொள்கை 2020-ன்படி, ஒரே நேரத்தில் முறையான மற்றும் முறைசாராக் கல்வி முறைகள் மூலம் வெவ்வேறு படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 


இதன் மூலம் மாணவர்கள் வெவ்வேறு திறன்களை அடையப் போதிய சுதந்திரம் வழங்கப்படும்'' என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகளைப் படிப்பதற்கான வழிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:


''1. மாணவர் இரண்டு டிப்ளமோ படிப்புகளையோ, 2 இளங்கலைப் படிப்புகளையோ அல்லது 2 முதுகலை படிப்புகளையோ ஒரே நேரத்தில் படிக்கலாம். 


2. இரண்டு முழு நேரப் படிப்புகளையும் ஒரே பல்கலைக்கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களிலோ படிக்கலாம். 


3. முதுகலைப் படிப்புக்குத் தயாரான ஒரு மாணவர், தனக்கு சம்பந்தமில்லாத வேறு ஒரு தளத்தில் இளங்கலைப் படிப்பை மேற்கொள்ள விரும்பினாலும் படிக்கலாம். எனினும் ஒரு பட்டப் படிப்பு வகுப்பு நேரம், மற்றொரு வகுப்புடன் பாதிக்கப்படாமல், வகுப்புகள் ஒன்றோடொன்று முரண்படாமல் இருக்க வேண்டும். 





4. ஒரு மாணவர் இரண்டு பட்டங்களை ஒரே நேரத்தில் படிக்கலாம். ஒன்றை முழுநேர நேரடி முறையிலும் மற்றொரு படிப்பை திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி அல்லது ஆன்லைன் கல்வி மூலம் படிக்கலாம். அல்லது 2 தொலைதூரக் கல்வி அல்லது ஆன்லைன் கல்வி இரண்டையும் ஒரே நேரத்தில் படிக்கலாம்.


5. தொலைதூரக் கல்வி அல்லது ஆன்லைன் கல்வி மூலம் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்புகளைப் படிக்கும்போது, யுஜிசி/ மத்திய அரசு அனுமதி பெற்ற / தன்னாட்சி பெற்ற கல்லூரிகள் மூலம் அங்கீகாரம் பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் மட்டுமே படிப்பதை உறுதி செய்ய வேண்டும். 


6. இந்த வழிகாட்டுதல்களின் கீழ் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்புகள், யுஜிசி மற்றும் அந்தந்த தன்னாட்சி பெற்ற/ தொழில்முறை கவுன்சில்களால் அறிவிக்கப்பட்ட ஒழுங்குமுறைகளால் நிர்வகிக்கப்படும்.


7. பல்கலைக்கழக மானியக் குழு அறிவிப்பு வெளியிட்ட தேதியில் இருந்து இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும். அறிவிப்பு முந்தைய நாட்களில் ஏற்கெனவே இரண்டு பட்டப் படிப்புகளைப் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் இந்த சலுகைக்கு உரிமை கோர முடியாது.


8. இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு மட்டுமே மேற்குறிப்பிட்ட விதிமுறைகள் பொருந்தும். பிஎச்.டி. படிப்புகளுக்கு இவை பொருந்தாது''.


இவ்வாறு யுஜிசி தெரிவித்துள்ளது.


*


நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை 2020-ஐ யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு படிப்படியாக அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இனிமேல் முதுகலைப் படிப்பைப் படிக்காமல் நேரடியாக பிஎச்.டி. படிப்பில் சேரும் வகையில் இளங்கலைப் படிப்புகளை அறிமுகம் செய்ய யுஜிசி திட்டமிட்டு வருகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி, முனைவர் ஆய்வுப் படிப்பான பிஎச்.டி. படிக்க விரும்புவோர், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.