Chennai Tourist Place: தமிழ்நாட்டின் அரசியல், வர்த்தக மற்றும் சினிமா தலைநகராக திகழ்வது சென்னை. சென்னைக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். சென்னை என்றாலே வெளியூர்களில் வசிப்பவர்களுக்கு நினைவுக்கு வருவது மெரினா கடற்கரையே ஆகும். ஆனால், சென்னையில் சுற்றிப் பார்க்க பல இடங்கள் உள்ளது. அதை கீழே காணலாம்.


1. தியோசோபிக்கல் சோசைட்டி ( அடையாறு)


சென்னை அடையாறில் இறையியல் சங்கம் என்ற இந்த தியோசோபிக்கல் சொசைட்டி அமைப்பு கடந்த 1890ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அடையாறு ஆற்றின் மிக அருகில் இது அமைந்துள்ளது. அடர்ந்த மரங்கள் சூழ கிராமத்திற்குள் இருப்பது போன்ற உணர்வைத் தரும் இந்த இடத்தின் உள்ளேதான் தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றான மிகப் பழமையான அடையாறு ஆலமரம் உள்ளது. மேலும், 100 ஆண்டுகளை கடந்த பழமையான கட்டிடங்களும் உள்ளது. இயற்கை கொஞ்சும் இந்த இடத்தை குடும்பத்துடன் சுற்றிப் பார்க்கலாம்.


2. கத்திப்பாரா சதுக்கம்:


சென்னையில் மக்கள் அதிகம் குவியும் பொழுதுபோக்கு தளமாக மாறியுள்ளது கத்திப்பாரா சதுக்கம். புல்வெளியுடன் பூங்கா, குழந்தைகள் விளையாட தனி இடம், பலவிதமான கடைகள் என மக்கள் குடும்பங்களுடன் மாலை நேரங்களில் பொழுதை கழிக்க மிகச்சிறந்த இடம். கத்திப்பாரா பாலத்திற்கு கீழே மிக அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த சதுக்கத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். 


3. ஆர்மேனியன் தேவாலயம்:


இந்தியாவில் உள்ள மிகப் பழமையான தேவாலயங்களில் ஒன்று இந்த ஆர்மேனியன் தேவாலயம். சென்னை பாரிமுனையில் 1712ம் ஆண்டு அதாவது 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது இந்த தேவாலயம். சென்னையின் அடையாளங்களில் தவிர்க்க முடியாதது இந்த ஆர்மேனியன் தேவாலயம். இந்த தேவாலயம் உள்ள தெரு ஆர்மேனியன் சர்ச் தெரு என்றே அழைக்கப்படுகிறது. 


4. கலைஞர் நூற்றாண்டு பூங்கா:


சென்னை கதீட்ரல் சாலையில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா தற்போது சுற்றுலா பயணிகளின் புதிய ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. 200 ஆண்டுகளாக இந்த இடம் விவசாய தோட்டக்கலை சங்கத்தினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த இடம் அரசால் மீட்கப்பட்டு அரசின் தோட்டக்கலைத்துறையால் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது. இயற்கை எழில் கொஞ்சலுடன் இந்த இடம் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. 



6. சேத்பட் சூழலியல் பூங்கா:


கீழ்ப்பாக்கம் அருகே உள்ள சேத்பட் பூங்கா சுற்றிப்பார்ப்பதற்கு மிகச்சிறந்த இடமாகும். இங்குள்ள சேத்பட் ஏரியில் நீர் நிரம்பினால் பொதுமக்கள் படகு சவாரி செய்ய அனுமதிக்கப்படும். அந்த நேரங்களில் படகுசவாரி செய்வது மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மேலும், பொதுமக்கள் இந்த இடங்களில் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 


7. சென்னையில் ஓடும் ஒரே ஒரு தனியார் பேருந்து:


சென்னை மாநகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், பாரிமுனை - பூந்தமல்லி வழித்தடத்தில் ஒரே ஒரு தனியார் பேருந்து மட்டும் தினசரி இயங்கி வருகிறது. இந்த பேருந்து சுதந்திர காலம் முதல் இயங்கி வந்ததால் இந்த பேருந்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தும் சென்னையின் அடையாளமாக இந்த தனியார் பேருந்தான கலைவாணி பஸ் சர்வீஸ் பேருந்து உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் இந்த தனியார் பேருந்திலும் ஒரு முறை பயணித்தவர். 


8. பரங்கிமலை தேவாலயம்:


இந்தியாவில் உள்ள முக்கியமான தேவாலயங்களில் ஒன்றாக செயின்ட் தாமஸ் மவுண்ட் தேவாலயம் முக்கியமானது. பரங்கிமலை தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது. சென்னை நகரத்திற்குள் ஒரு குட்டி மலைப்பயணம் போல இந்த தேவாலயத்திற்குச் செல்வது இருக்கும். இந்த தேவாலயம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் களைகட்டி காணப்படும். 


சென்னையில் இதுதவிர ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று விரும்பும் பக்தர்களுக்கு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், வடபழனி முருகன் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், சாந்தோம் தேவாலயம், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளது. சென்னை புறநகர்களிலும் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளது.