வட மாநில தொழிலாளர்களிடம் வீம்புக்கு சண்டை

Continues below advertisement

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ப்ரித்வி நகர் பகுதியில், மஸ்தான் பாபு - கவிதா தம்பதியினர் காய்கறி கடை வைத்து நடத்தி வருகின்றனர். கடந்த ஓராண்டுக்கு மேலாகவே இவர்கள் கடை வைத்து உள்ளனர். இந்த கடையில் 10 - க்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த கடையில் வேலை பார்த்து வரும் வட மாநில இளைஞர்கள் அங்கு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடை ஆரம்பித்த சில நாட்களிலேயே வட மாநில இளைஞர்களிடம் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வீம்புக்கு வம்பிழுத்து வருவதாக கூறப்படுகிறது. வட மாநில இளைஞர்களும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Continues below advertisement

சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தம்

சில இளைஞர்கள் கடைக்கு வந்து வட மாநில இளைஞர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கடையில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் தான் இந்த கடைக்கு வந்த சில இளைஞர்கள் வட மாநில தொழிலாளி ஒருவரை ரத்தக் காயம் ஏற்படும் அளவுக்கு தாக்கியுள்ளனர்.

இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காய்கறி வாங்குவது போல் வரும் இளைஞர்கள் சிலர் அங்கு வேலை பார்த்து வரும் வட மாநில இளைஞர்களிடம் தகாத வார்த்தைகள் பேசி வேண்டும் என்றே வம்பிழுத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசார் நடவடிக்கை

தொழில் போட்டி காரணமாக சிலர் இந்த வேலைகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. கடந்த சில மாதங்களாகவே இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகவும், இது போன்று நடக்காமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது