உல்லாசமாக இருக்க மறுப்பு - கொலையில் முடிந்த காதல்

Continues below advertisement

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அடுத்துள்ள ஒசஅள்ளிபுதூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 40). இவருக்கு ராஜேஸ்வரி (வயது 30) என்ற மனைவியும், ஒரு மகன், மகளும் உள்ளனர். பிரபு பெங்களூருவில் தங்கி கட்டிட கான்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார். ராஜேஸ்வரியின் அக்கா முனியம்மாளின் கணவர் அனுமந்தன் (40). பில்டிங் கான்டிராக்டரான இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து வாடகைக்கும் ஓட்டி வருகிறார்.

பிரபுவும், அனுமந்தனும் பங்காளி முறை கொண்டவர்கள். இவர்களை சகோதரிகளான இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், பெங்களூருவில் தங்கி உள்ள பிரபு மாதத்தில் ஓரிருமுறை சொந்த ஊருக்கு வந்து செல்வார். இதனிடையே ராஜேஸ்வரிக்கும், அனுமந்தனுக்கும் தகாத உறவு ஏற்பட்டு அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

Continues below advertisement

இது அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்ததால், தகாத உறவை கைவிட்ட ராஜேஸ்வரி, அனுமந்தனுடன் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். அனுமந்தன் உல்லாசமாக இருக்க பலமுறை அழைத்தும் அவர் மறுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனுமந்தன் ராஜேஸ்வரியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

குழிக்குள் தள்ளி கல்லை தூக்கி போட்டு கொலை

ராஜேஸ்வரி தனது மகன் படிக்கும் பள்ளிக்கு பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய போது வழி மறித்த அனுமந்தன் , கடைசியாக ஒரு முறை தனியாக பேச வேண்டும் என அழைத்துள்ளார். இதையடுத்து ராஜேஸ்வரி வீட்டிற்கு அருகில் உள்ள தளவாய் அள்ளி பகுதியில், கல்லுகொல்லைமேடு என்ற இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு பேசிக் கொண்டிருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அனுமந்தன் அருகிலிருந்த குழிக்குள் ராஜேஸ்வரியை தள்ளி விட்டு, அவரது தலை மீது கல்லை தூக்கி போட்டுள்ளார். இதனால், ராஜேஸ்வரி மயங்கினார். பின்னர் அவர் மீது டிராக்டரில் வைத்திருந்த கட்டிட கழிவு மண்ணை கொட்டி உள்ளார்.

இவ்வாறு 7 முறை டிராக்டரில் கட்டிட கழிவு லோடை ஏற்றி வைத்து குழிக்குள் கொட்டி விட்டு சென்றுள்ளார். இதனிடையே அருகில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதை பார்த்துள்ளனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது, அங்கு குழிக்குள் மண் கொட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அனுமந்தனை பிடித்த விசாரித்த போது, ராஜேஸ்வரியை கொலை செய்து மண்ணை கொட்டி புதைத்து விட்டதாக கூறினார். இதையடுத்து போலீசார் மண்ணை தோண்டி ராஜேஸ்வரியின் உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி வழக்குப்பதிவு செய்து அனுமந்தனை கைது செய்தனர்.