சி.எம்.டி.ஏ என்று அழைக்கப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தற்போது பெய்த மழை, அதன்பிறகு நிகழ்ந்த வெள்ளத்தால் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலைப் பகுதி ஒன்றைக் குடியிருப்புப் பகுதியாக மாற்றுவதற்கு சி.எம்.டி.ஏ ஒப்புதல் அளித்துள்ளதைக் கைவிடுமாறு பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும், சென்னை மாநகரத்திற்குள் மழைக் காலத்தில் மழை நீர் தேங்குவதற்கும், நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கும் சி.எம்.டி.ஏவின் நிர்வாக நடைமுறைகளே காரணம் எனவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. 


சி.எம்.டி.ஏ என்றால் என்ன?


சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் என்று அழைக்கப்படும் சி.எம்.டி.ஏ சென்னை பெருநகரப் பகுதியின் நிலப்பரப்பைக் கட்டுப்படுத்துகிறது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் பகுதிகள் அடங்கும். சுமார் 1200 சதுர கிலோமீட்டர்கள் வரை ஆளுகை கொண்ட சி.எம்.டி.ஏ அமைப்பு நகரத் திட்டமிடல், மேற்பார்வை, வளர்ச்சி முதலான பணிகளை மாநகராட்சி, நகராட்சி மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளோடு இணைந்து கட்டுப்படுத்துகிறது. 



மேலும், சி.எம்.டி.ஏ அமைப்பு சென்னை மாநகரத்திற்குத் தேவையான மிகப்பெரிய இடங்களையும் நிர்மாணித்து, மக்களுக்கு அதிகம் பயன்படும் இடங்களையும் கட்டும் பணிகளையும் மேற்கொள்கிறது. கோயம்பேடு காய்கறி சந்தை, கோயம்பேடு பேருந்து நிலையம், சென்னை மின்சார ரயில் சேவை, சென்னை புறநகர் ரிங் சாலை, மாதவரம், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளின் வெளியூர் பேருந்து நிலையங்கள் ஆகியவை சி.எம்.டி.ஏ அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள். 


2015ஆம் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளம் குறித்து ஆய்வு செய்த சி.ஏ.ஜி அமைப்பு 2015 சென்னை வெள்ளத்திற்குக் காரணம் சி.எம்.டி.ஏ அமைப்பு என்று கூறியது. சென்னை மாநகரத்தின் நீர் வழிப் பாதைகளில் கட்டிடங்கள் கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ அமைப்பு ஒப்புதல் கொடுத்ததே காரணம் என சி.ஏ.ஜி அறிக்கை குற்றம் சாட்டியது. `சி.எம்.டி.ஏ அமைப்பு விளை நிலங்கள், காலி இடங்கள் ஆகியவற்றில் நீர் வெளியேறும் பாதையைத் தடுக்கும் விதமாக கட்டப்பட்ட கட்டிடங்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது’ என்று 2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கையில் சி.எம்.டி.ஏ மீது கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தற்போது இதைப் போன்ற மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.



பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கடந்த ஜூலை மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலைப் பகுதி ஒன்றைக் குடியிருப்பு பகுதியாக மாற்றுவதற்கு ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தனியாருக்கு சி.எம்.டி.ஏ ஒப்புதல் வழங்க அப்பகுதி மக்களின் கருத்தைக் கோர அறிவிக்கை வெளியிட்டிருந்ததைக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது நீதிமன்றத்திற்கு எதிரானது எனவும், வடசென்னை மக்களை வெள்ளத்தில் மூழ்க வைக்கும் திட்டமாகவும் இது இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்திகள் தற்போது மீண்டும் சென்னையில் அதிக மழையால் மழைநீர் தேங்கி, மக்கள் அவதிக்குள்ளாகி இருப்பதால் பேசுபொருளாகி உள்ளன.