அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ ஆய்வு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை பதிவேற்றும் மென்பொருளை அமல்படுத்த கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் முகமது காதர் மீரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவ ஆய்வு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைகளை பதிவேற்றும் செய்யும் மென்பொருளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், இதுதொடர்பாக கடந்த 2012 ம் ஆண்டு பஞ்சாப் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தேசிய தகவல் மையம் ஒருn மென்பொருளை உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த (MedLeaPR) மென்பொருள் மூலம் பல்வேறு மருத்துவ சட்ட அறிக்கைகள் மற்றும் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் வழங்குவதற்கும், சேமிப்பதற்கும் முடியும் என்பதால், பஞ்சாப், டெல்லி, மஹாராஷ்டிரா, ஹரியானா போன்ற மாநிலங்கள் இந்த மென்பொருளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவ சான்றிதழ், உடற்கூறாய்வு சான்றிதழ் போன்றவற்றை சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்யலாம் என்பதாலும், போலியான சான்றிதழ்களை உருவாக்க முடியாது என்பதாலும் பொதுமக்கள் மட்டுமல்லாமல், அரசுத் துறை அதிகாரிகளுக்கும் பலனளிக்கும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திலும் இந்த மென்பொருளை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், இதுவரை அமல்படுத்தப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் நீதிபதி டி. கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய மாநில அரசுகள் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.