தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் பயணம் நிறைவுபெற்று, 4ஆம் ஆண்டு தொடக்க விழா பற்றிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் இன்று (அக்.20) நடைபெற்றது. இந்த விழாவில், புத்தகத்தை வெளியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:


”சந்திரசூட் தலைமை நீதிபதியாகும்போது ஒரு கருத்தை சொல்கிறார். அப்பா தலைமை நீதிபதியாக இருந்து மகனும் தலைமை நீதிபதியாக இருந்து அப்பாவின் தீர்ப்பையே எதிர்த்து தீர்ப்பு எழுதியவர் தலைமை நீதிபதி.


ஏறக்குறைய இது எனக்கும் பொருந்தும். அப்பா ஒரு தேசியக் கட்சியில் தலைவராக இருந்து மகள் ஒரு தேசியக் கட்சிக்கு நேர் எதிரான கட்சியில் சேர்ந்து மாநிலத் தலைவராக மாறி, தமிழ்நாடு சரித்திரத்தில் அப்பா ஒரு மாநிலக் கட்சியின் தலைவராகவும், மகள் ஒரு மாநிலக் கட்சியின் தலைவராகவும் இருந்தார் என்ற பெயரை வாங்கியதை நான் தமிழ்நாட்டுக்கு செய்த மிகப்பெரிய கடமை என நினைக்கிறேன்.


 






’பணியில் இடையூறு செய்வதில்லை’


தெலங்கானாவில் நான் எந்தப் பணியிலும் இடையூறு செய்வதில்லை. ஆனால் என்னுடைய பணிகள் இடையூறாக இருப்பதாக ஆட்சியாளர்கள் சில நேரம் இணைத்து விடுகிறார்கள்.


என்னை குடியரசு தினத்தன்று கொடி ஏற்ற விடவில்லை. கவர்னர் உரையாற்ற விடவில்லை. ஆனால் இது எப்படி இருந்தாலும் நான் என் பணியில் எந்த இடைவெளியும் விடவில்லை.


தெலங்கானாவிலேயே இருக்கிறார் எப்போது புதுச்சேரி செல்கிறார் எனக் கேட்கிறார்கள். ஆனால் புதுச்சேரியில், நாராயணசாமி தெலங்கானாவில் விரட்டி விட்டார்களா எனக் கேட்கிறார்கள், மற்றொரு தரப்பினர் இரண்டு மாநிலங்களிலும் இல்லாமல் தமிழ்நாட்டிலேயே இருக்கிறார் எனக் கூறுகிறார்கள்.


ரஜினிகாந்துக்கும் எனக்கும் ஒற்றுமை


தெலங்கானாவிலும் புதுச்சேரியிலும் முழுமையாகப் பணியாற்றுகிறேன். புதுச்சேரியில் உரிமையான அன்பை செலுத்துகிறேன். வெறி என்பதை அழுத்திச் சொன்னால் தான் வெற்றி. நான் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தபோதும், மருத்துவராக இருந்தபோதும் மிகப்பெரும் வித்தியாசம் இருந்ததாக என் கணவர் தெரிவித்துள்ளார்.


ரஜினிகாந்துக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை என இங்கே யாரோ சொன்னார்கள். ரஜினிகாந்தை 16 வயதினிலே படத்தில் எப்படி கூப்பிட்டார்களோ அப்படிதான் என்னையும் கூப்பிட்டார்கள்.


பரட்டை தான் எனக்கு பலமாகிவிட்டது. எல்லாரும் தமிழ்நாட்டில் என்னைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் எனக்கு சில வருத்தம் உண்டு.


’நான் ஒரு எளிய ஆளுநர்’


ராம்நாத் கோவிந்த் பணி ஓய்வு பெற்றபோது எல்லா ஆளுநர்களையும் அழைத்து பிரிவு உபச்சார விழாவில் விருந்து கொடுக்கிறார்.


எல்லா ஆளுநர்களையும் அழைத்திருக்கிறார்கள். ஆனால் நான் ஆளுநர் விருந்துக்கு வர முடியாது எனக் கூறி நீரில் மூழ்கி இருந்த பத்ராச்சலத்துக்கு சென்றேன். தொடர்ந்து ஆளுநர் இந்த இடங்களுக்குச் செல்கிறார் என்ற ஃப்ளாஷ் நியூஸ் வந்த அடுத்த அரை மணி நேரத்தில் ஆளுநர் இந்த இடங்களுக்குச் செல்கிறார் என்ற ஃபளாஷ் நியூஸ் வந்தது.


தனது தோட்டம் சூழ்ந்த பங்களாவில் தூங்கிக்கொண்டிருந்த முதலமைச்சரை வரவழைத்த திறமை இந்த ஆளுநருக்கு உள்ளது.


இடையூறு அல்ல. பிறரை வேலை செய்ய வைக்கும் திறமை என்னிடம் இருக்கிறது. நான் எளிய ஆளுநர், நான் ரயிலில் செல்கிறேன், ஆனால் முதலமைச்சர் ஹெலிகாப்டரில் செல்கிறார்.


’தமிழ் என்னைப் பெற்றது’


ஆளுநருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது எனக் கேட்டார்கள். பல பேர் சொல்வது போல் என்னை செதுக்கியவர்கள் இல்லை, என்னை ஒதுக்கியவர்கள் தான் இருக்கிறார்கள்.


எனக்கு தனி விமானம் எடுக்கும் உரிமை இருக்கின்றது. ஆனால் இதுவரை நான் தனி விமானம் எடுத்ததில்லை. தெலங்கானா ராஜ்பவனில் நான் சாப்பிடுவதற்கான பணத்தை மாதாமாதம் கட்டி விடுகிறேன்.


என் அப்பாவை 2 ஆண்டுகள் கொரோனா நேரத்தில் அடைத்து வைத்திருந்தேன் . ஆனால் இணையத்தில் பலவற்றையும் எழுதுகிறார்கள். எதிரணியில் இருந்தாலும் என் அப்பாவுக்கு செய்ய வேண்டிய கடமையை முழுமையாக செய்திருக்கிறேன்.


தமிழ் கற்றதால் நான் தமிழ் பேசவில்லை, தமிழ் என்னைப் பெற்றதால் நான் தமிழ் பேசுகிறேன். அந்தக் கடமையை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன்.


என்னை தெலங்கானாவில் அக்கா என்று தான் அழைக்கிறார்கள், எந்த அரசியலமைப்புச் சட்டமும் ஆளுநர் கருத்து சொல்லக்கூடாது என்று சொல்லவில்லை. 


தமிழ்நாட்டில் எதுவும் தவறு இருந்தால் அதையும் சுட்டிக்காண்பிப்பேன். இதனைத் தடுக்க யாராலும் முடியாது. நாராயணசாமிக்கு ஆளுநர் என்றாலே அலர்ஜி, அது கிரண்பேடியாக இருந்தாலும் சரி, தமிழிசையாக இருந்தாலும் சரி” எனத் தெரிவித்துள்ளார்.