பகலில் ஓடிக் கொண்டிருந்த அணில் தற்போது இரவில் ஓடுகிறதா ? - தமிழிசை சவுந்தராஜன் விமர்சனம்
பகலில் ஓடிக் கொண்டிருந்த அணில் தற்பொழுது இரவில் ஓடுகிறதா ? எந்தத் தடையையும் நாங்கள் தாண்டுவோம் என்கிறீர்கள் நீங்கள் மின் தடையை கூட தாண்டவில்லை - தமிழிசை சவுந்தராஜன்

பாரதிதாசன் 135வது பிறந்த நாள்
புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்;
திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் தமிழ் என்று வந்தால் அதில் சாதியை பார்க்கிறார்கள், மதத்தை பார்க்கிறார்கள். ஏன் பாரதி, கம்பனை கொண்டாட மறுக்கிறீர்கள் ? அதுவும் தமிழ் தானே , தமிழில் கூட வேற்றுமையை விதைத்தவர்கள் நீங்கள்.
முதல்வர் சொல்கிறார் மத்திய அரசு பல தடைகளைக் கொண்டு தடுத்துக் கொண்டிருக்கிறது என்று , என்ன தடை என்று நான் கேட்கிறேன் ? தினம் தினம் மத்திய அரசு இவர்களை ஆட்சி நடத்த விடாமல் தடுத்துக் கொண்டிருப்பது போல மாயை தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். திமுகவைச் சார்ந்த அமைச்சர்கள் ஏறக்குறைய 9 பேர் மேல் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. யார் அரசாங்கத்திற்கு தடையாக இருக்கிறார்கள் ? இவர்கள் சுரண்டிய பணம் யாருடையது.
எந்த ஆட்சியிலும் இது போல் இல்லை
எதற்கெடுத்தாலும் மத்திய அரசிடம் இருந்து நிதி எங்கே என்று கேட்கிறார்கள். இவர்கள் சுருட்டிய பணத்தை எடுத்துப் பார்த்தால் அதை விட அதிகமாக இருக்கும். அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆட்சிக்கு வருவதே மக்களின் பணத்தை சுரண்டுவதற்காக தான் , இதுவரை எந்த ஆட்சியிலும் குடி தண்ணீரில் மலம் கலக்கவில்லை. திமுக ஆட்சியில் குடிதண்ணீரில் மலம் கலக்கப்பட்டுள்ளது,
பள்ளி குழந்தைகளிடம் ஜாதியை வேற்றுமை இதுவரை இல்லை, திமுக ஆட்சியில் பள்ளி குழந்தைகளிடம் ஜாதியை வேற்றுமை விதைக்கப்பட்டுள்ளது.
நிறைய அணில்கள் ஓடுகிறது
எந்த தடையும் நாங்கள் தாண்டுவோம் என்று முதல்வர் கூறி இருக்கிறார். மத்திய அரசு எந்த தடையும் கொண்டு வரவில்லை, தடையை மாநில அரசு தான் கொண்டு வந்துள்ளது. இரவில் நிறைய அணில்கள் ஓடுகிறது என்று நினைக்கிறேன் நேற்று எங்கள் வீட்டில் மட்டும் மூன்று முறை மின்தடை ஏற்பட்டது. பகலில் ஓடிக் கொண்டிருந்த அணில் தற்பொழுது இரவில் ஓடுகிறதா ? எந்தத் தடையும் நாங்கள் தாண்டுவோம் என்கிறீர்கள் நீங்கள் மின்தடையை கூட தாண்டவில்லை. மின் துறை ஊழியர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் அவர்கள் வருவதில்லை, துறை ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கிறது என்று சொல்கிறார்கள், மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை , அரசாங்க ஊழியர்கள் பற்றாக்குறை. முதலில் மின்தடையை தாண்டுங்கள் பின்பு அனைத்து தடைகளையும் தாண்டுகிறீர்களா என்று பார்ப்போம். இரவில் எந்த அணில்கள் ஓடுகிறது என்று கண்டுபிடித்து முதலில் மின்தடையை சரி செய்யுங்கள்.
1969ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ராஜமன்னார் கமிட்டியை கொண்டு வந்தார்கள் அதை அவர்கள் பின்பற்றவில்லை, திமுக காங்கிரசுக்கு அடிமை ஆகிவிட்டது. ராஜமன்னார் கமிட்டி சொன்னதை நீங்கள் நிறைவேற்றவில்லை. காங்கிரசுக்கு அடிமையாக இருந்தீர்கள் இன்றைக்கும் காங்கிரசுக்கு அடிமையாக இருந்து கொண்டிருக்கிறீர்கள்.
தவெக விஜய் அரசியல் நகர்வு
விஜய் இப்பொழுது தான் பூத் கமிட்டி கூட்டத்திற்கு இறங்கி வந்திருக்கிறார் அதற்குப் பின்பு அவருடைய அரசியல் நகர்வு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
திருமாவளவனுக்கு அழுத்தம்
காங்கிரஸில் துணை முதல்வர் செல்வப் பெருந்தகை என்று போஸ்டர் ஒட்டினால் உடனடியாக கிழிக்கப்படுகிறது. திருமாவளவன் சுதந்திரமாக ஒரு நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ள முடியாத அளவிற்கு அழுத்தப்படுகிறார். அவர்கள் கூட்டணியில்தான் பிரச்சனை எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது என்று கூறினார்.





















