செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சித்தாமூர் அடுத்துள்ள பேரம்பாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும், வென்னியப்பன், அவரது மனைவி சந்திரா இருவரும் கடந்த 13ஆம் தேதி, போலி மதுபானம் (கள்ளச்சாராயம் கலந்து தயாரிக்கப்பட்ட போலி மதுபானம் என கூறப்படுகிறது ) குடித்துள்ளனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்
அதேபோல், பெருங்கரணை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மனைவி அஞ்சலி, மாமியார் வசந்தா ஆகிய மூன்று பேர் கள்ளச்சாராயம் குடித்த நிலையில், சின்னத்தம்பி, வசந்தா இருவரும் உயிரிழந்தனர். சின்னத்தம்பியின் மனைவி அஞ்சலி ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெருங்கரணை பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் மற்றொரு நபரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பட்டியல்
அஞ்சலை ,சங்கர், சந்திரன், ராஜி, முத்து ,தம்பு ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக சித்தாமூர் காவல் நிலையத்தில் ஆறு பிரிவின் கீழ் இரண்டு வழக்குகள் பதிவு செய்து , விசாரணை மேற்கொண்ட போலீசார், கள்ளச்சாராயம் விற்றதாக அமாவாசை, சந்துரு, வேலு ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜேஷ் என்ற நபரை தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து 135 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது.
பணி நீக்கம் மற்றும் பணி மாற்றம்
இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து நான்கு பேர் பலியான விவகாரம் தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுவிலக்கு பிரிவை சேர்ந்த செங்கல்பட்டு துணைக் கண்காணிப்பாளர் துரைப்பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேல்மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் ஆகியோரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உறவினர்கள் புகார்
இந்த நிலையில் உயிரிழந்த வென்னியப்பன் மகள் தேவி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் உயிரிழந்த தனது உறவினர்கள் மற்றும் தாய் தந்தை உடல்களை, உறவினர்கள் வருவதற்குள் அடக்கம் செய்து விட்டதாகவும்,
உடலை தோண்டி எடுத்து மறு உடல் கூராய்வு மேற்கொள்ள வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத்திடம் மனு அளித்தார். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் பெற முயற்சித்த பொழுது, புகார் குறித்த தகவல்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைக்குமாறு தெரிவித்தார். தகவல்களை வாட்ஸ் அப்பில் அனுப்பிய பிறகும், இதுவரை எந்தவித பதிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இருந்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.