வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாக கொண்டு 'இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்' (ஐஎப்எஸ்) செயல்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு சென்னை, காஞ்சிபுரம் தமிழகம் முழுவதும் 21 இடங்களில் கிளைகள் உள்ளன. இந்நிறுவனம், வெளியிட்ட விளம்பரத்தில், 'எங்கள் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் வட்டியாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் பணம் தரப்படும்' என்று தெவிக்கப்பட்டு இருந்தது. கிட்டத்தட்ட இந்த நிறுவனமானது மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதிகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.



 

 

கவர்ந்திழுத்த விளம்பரம்

 

முதலில் இந்த நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் மாதம் 8000 ரூபாய் கொடுக்கப்படும். குறிப்பாக நீங்கள் தரும் முன் பணமானது பத்திரமாக பாதுகாக்கப்படும் என கவர்ச்சிகரமாக விளம்பரத்தை செய்திருந்தனர். பொதுமக்களும் மாதம் மாதம் 8000 ரூபாய், ஒரு லட்ச ரூபாய்க்கு தருவதாக விளம்பரம் செய்திருந்தனர். இதை நம்பி அந்நிறுவனத்தில் ஒரு லட்சம் பேர் வரை முதலீடு செய்துள்ளனர்.

 

பூதம் போல் கிளம்பிய ஆருத்ரா

 

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆருத்ரா என்ற நிறுவனம் ஒரு லட்ச ரூபாய்க்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருவதாக கூறி மோசடியில் சிக்கியது. அதே காலகட்டத்தில் ஐ எஃப் எஸ் நிறுவனமானது முதலீட்டாளர்களுக்கு பணம் தராமல் இருந்து வந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள், நிதி நிறுவனத்திற்கு நேரில் சென்று வட்டி கேட்டுள்ளனர். அதற்கு நிதி நிறுவன அதிகாரிகள் சரியான பதில் தராமல் இருந்துள்ளனர் மேலும் நீங்கள் இதுகுறித்து புகார் அளித்தால் ஆருத்ரா போன்று உங்களுக்கு பணம் கிடைக்காமல், போகிவிடும் என மிரட்டியும் வந்துள்ளனர்.

 

புதையல் தோண்ட.. போய் பூதம் கிளம்பிய கதையாய்...

 

இதைதொடர்ந்து இந்த நிதி நிறுவனத்தின் மீது வேலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை என பல்வேறு காவல் நிலையங்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மோசடி புகார் அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்தியதில், 1 லட்சம் பேரிடம் சுமார் 6 ஆயிரம் கோடி வரை மோசடி செய்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



 

சுற்றி வளைக்கும் போலீஸ்

 

இதையடுத்து அந்நிறுவன உரிமையாளர்கள் 4 பேர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஐஎப்எஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.27 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கினர். மேலும், இந்த வழக்கு தொடா்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநா்கள், ஊழியா்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா். இந்நிலையில், ஐ.எப்.எஸ். நிறுவனத்தைச் சோந்த சென்னை ஜவஹா் நகா் குப்புராஜ், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஜெகநாதன், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த மின்மினி சரவணகுமாா் ஆகியோரை கடந்த வாரம் கைது செய்தனா்.

 

சொகுசு காா்கள் பறிமுதல்

 

 

 இவா்கள் 3 பேரையும் காவலில் எடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் சரவணகுமாரிடம் 10 பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்களும், 4 பதிவு செய்யப்படாத ஆவணங்களும், கணினி, காசோலை புத்தகம், 2 சொகுசு காா்களை பறிமுதல் செய்தனா். ஜெகன் நாதனிடமிருந்து 2 சொகுசு காா்களும், குப்புராஜிடமிருந்து ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 



சமூக வலைதளத்தில் வைரல்

 

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே லஷ்மி நாராயணன் துபாய் நாட்டிற்கு தப்பி சென்றதாக  சமூக வலைதளங்களில் , ரெசிடென்சி அட்டை ஒன்று உலாவி வருகிறது. மேலும் அதே போன்று சில இயக்குனர்களும் தப்பி சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உண்மை தன்மையை தற்போது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது, தற்பொழுது சமூக வலைத்தளத்தில் உலா வரும் செய்திகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். ஒருவேளை அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று இருந்தால், அது குறித்தும் விசாரிக்கப்படும் என தெரிவித்தனர்.