Tamil nadu Knowledge City: தமிழ்நாடு ”அறிவு நகரம்” திட்டத்திற்கான பணிகளுக்கான நில அளவு, 870 ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ”அறிவு நகரம்” திட்டம்
கடந்த 2022-23 நிதியாண்டிற்கான மாநில பட்ஜெட்டில், தமிழ்நாடு ”அறிவு நகரம்” திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் பெரியபாளையத்தை ஒட்டி 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,703 ஏக்கர் பரப்பளவில் அறிவு நகரம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதைதொடர்ந்து எழுந்த பல்வேறு தரப்பு கோரிக்கை மற்றும் எதிர்ப்புகளின் விளைவாக, திட்டத்தின் பரப்பளவை 1424 ஏக்கராக குறைத்து தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல்மாளிகைப்பட்டு, செங்காத்தான்குளம் மற்றும் வெங்கல் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தல் பணிகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், நிலம் கையகப்படுத்தலில் தொடரும் பல்வேறு சிக்கல்கள் காரணமாக, அறிவு நகரம் திட்டத்திற்கான் பரப்பளவை 870 ஏக்கராக தமிழக அரசு குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடங்கிய பணிகள்:
இதனிடையே, அறிவு நகரத்திற்கான மாஸ்டர் பிளான் தயாராகிவிட்டதாகவும், அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும் என்றும் TIDCO தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் அறிவு சார்ந்த பொருளாதாரத்திற்கு உந்துகோலாக கருதப்படுகிறது. அதன் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை ஒருங்கிணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. கல்வியை அதன் முக்கிய கருப்பொருளாகக் கொண்டு, பசுமை கட்டிடங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து மற்றும் ஸ்மார்ட் இணைப்பு உள்ளிட்ட நிலையான உள்கட்டமைப்பை இந்த திட்டம் கொண்டிருக்கும். வளர்ந்து வரும் துறைகளில் ஆராய்ச்சிக்கான ஒரு புதுமை மற்றும் ஆராய்ச்சி மையத்தை உருவாக்குவதிலும், பல தொழில்களில் அதிக மதிப்புள்ள வேலைகளை உருவாக்குவதிலும் அறிவு நகரம் திட்டம் கவனம் செலுத்த உள்ளது.
தமிழ்நாடு அரசு தீவிரம்:
சர்வதேச மற்றும் உள்நாட்டு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை ஈர்க்கும் நோக்கில் அறிவு நகரம் மூன்று கட்டங்களாக உருவாக்கப்பட உள்ளது. ஜெர்மனியின் RWTH ஆச்சென் பல்கலைக்கழகம் ஏற்கனவே TIDCO உடன் இணைந்து அறிவு நகரத்தில் ஒரு புதிய ஆய்வகத்தை நிறுவ ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. கூடுதலாக, தமிழ்நாடு அரசு உலகளவில் 300க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களை அணுகி, இந்த திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருக்க, பிற முன்னணி உலகளாவிய மற்றும் இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு இணைந்து பணியாற்றி வருகிறது.
தமிழ்நாடு ”அறிவு நகரம்” உட்கட்டமைப்பு விவரங்கள்:
தமிழ்நாடு ”அறிவு நகரம்” திட்டம் தொடர்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட அனைத்தும் இந்த நகரத்தில் அமைந்திருக்கும். பசுமையான வாழ்விட சூழலில் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இந்த நகரம் திகழும். உயிரின அறிவியல், வேளாண் தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு, வான்வழி மற்றும் பாதுகாப்பு, நிதி தொழில்நுட்பம், தொலைத்தொடர்புகள் உள்ளிட்ட பிரிவுகளில் ஆராய்ச்சியும் புத்தாக்கத்தையும் வளர்க்கும் பணிகளையும் தமிழ்நாடு அறிவு நகரம் மேற்கொள்ளும். தொழிற்பயிற்சி மையங்களும் அமைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் பலன்கள்:
- தமிழ்நாடு அறிவு நகர திட்டம் சுமார் ஒரு லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- வட சென்னையை ஒரு முக்கிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையமாக நிலைநிறுத்தும்
- தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு இடையே ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர கற்றலை தமிழ்நாடு அறிவுநகர திட்டம் ஊக்குவிக்கும்
- பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவுசார் தொழில்களுக்கு தமிழ்நாடு அறிவு நகரம் தாயகமாக இருக்கும்
அதன்படி, மேற்குறிப்பிடப்பட்ட திட்டம் முடிவடையும் போது ஊத்துக்கோட்டை பகுதியானது கல்வி மண்டலமாக உருப்பெறுவதோடு, திருவள்ளூர் மாவட்டத்தின் பொருளாதாரமும் மேம்படும். உருவாகும் வேலைவாய்ப்பால் மாவட்ட இளைஞர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என நம்பப்படுகிறது.
திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?
அறிவுநகரம் 870 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசுக்கு சொந்தமான 556 ஏக்கர் புறம்போக்கு நிலங்களுடன் உழவர்களுக்கு சொந்தமான 314 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுமா? அல்லது திட்டத்திற்காக மொத்தமாகவே உழவர்களின் நிலங்கள் மட்டும் தான் கையகப்படுத்தப்படுமா? என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.
எனவே, ஆரணி ஆற்றங்கரையில் மூன்று போகங்களும் சிறப்பாக விளையக்கூடிய நிலங்களை, இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்படக் கூடாது என அப்பகுதி மக்கள் தற்போதே வலியுறுத்த தொடங்கியுள்ளனர். தமிழக அரசு விரும்பினால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 556 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் அறிவு நகரத்தை அமைக்கலாம். அல்லது அந்த திட்டமே எங்களுக்கு வேண்டாம் என்பதே அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குரலாக உள்ளது.