வட மாநில தொழிலாளர்கள் - தமிழ் தொழிலாளர்கள் என பிரித்துப் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி சி. ஐ. டி .யு தொழிற்சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம். அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்த தொழிலாளர்கள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
குறைந்த சம்பளத்தில் வடமாநில தொழிலாளர்கள்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் தொழிற்சாலைகள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில்லை என புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உள்ளூர் மக்களான தமிழ் தொழிலாளர்கள் அதிக ஊதியமும் விடுமுறையும் கேட்பதாகவும், ஆனால் வடமாநில தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தில் நிறைந்த வேலை செய்வதால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என பதிலளித்தார். மாவட்ட ஆட்சியரின் பேச்சு பல்வேறு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வைரலாக பரவியது. இந்தநிலையில் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை திரும்ப பெற வேண்டும்
அந்தவகையில் தமிழ் தொழிலாளர்கள் - வட மாநில தொழிலாளர்கள் என பிரித்து பேசியதை கண்டித்தும், பண்டிகை விடுப்பு,சம்பள உயர்வு கேட்பது குற்றம் போலவும், குறைவான சம்பளத்தில் வேலை செய்வது ஒழுக்கம் என்பது போலவும், நியாயமான சம்பளம் கேட்டால் ஒழுக்கமற்ற தொழிலாளர்கள் என்பது போலவும், தொழிற்சாலைகளின் தூதுவர் போன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேசுவதாகவும் கூறி, அவரது பேச்சையும் செயலையும் கண்டித்தும், தமிழக அரசு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் பெரியார் துணை அருகில் இன்று மாலை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேசியதை கண்டித்து அறிவிக்கப்பட்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் அனுமதி அளிக்காத நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளும், தொழிலாளர்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு
இந்நிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊர்வலமாக வந்து கோஷமிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றிச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்த தொழிற்சங்க நிர்வாகிகளையும், தொழிலாளர்களையும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் போராட்டமானது காஞ்சிபுரம் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.