தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அந்நாட்டு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் தொழில் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
அரசுமுறை பயணமாக கடந்த 27-ம் தேதி ஸ்பெயின் புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். தொடர்ந்து, அந்நாட்டிலுள்ள முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தொழில் ரீதியிலான ஆலோசனை மேற்கொண்டனர்.அப்போது அவர்களிடம் தமிழ்நாட்டில் முதலீடு செய்திடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஆக்சியானா நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ரபேல் மேத்யோ, மேனூல் மன்ஜன் வில்டா (சி.இ.ஓ, வாட்டர் டிவிஷன்) ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து உரையாடினர்.
இச்சந்திப்பின்போது, காற்றாலை மின் உற்பத்தியிலும், நீர் சுத்திகரிப்பு, நீர் மறுசுழற்சியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவது குறித்தும், இத்துறையில் பல பெரும் முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவது குறித்தும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகளுக்கான தனிக்கொள்கை ஒன்றையும் வகுத்து தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது என்றும், எனவே இத்துறைகளில் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகிய ஆக்சியோனா நிறுவனத்தின் முதலீட்டிற்கு உகந்த இடமாக தமிழ்நாடு இருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் பற்றி தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விரிவாக விளக்கினார். இந்த கலந்தாலோசனையின் முடிவில் தமிழ்நாட்டில் சில துறைகளில் முதலீடுகள் செய்ய ஆக்சியானா நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, பீங்கான் மற்றும் வீட்டுக் கட்டுமான பொருட்களின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக திகழும் ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் கார்லஸ் விளாகியூஸ், இந்திய இயக்குநர் நிர்மல் குமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.
ரூ.400 கோடி முதலீடு உறுதி
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்காக உறுதி அளித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் புதிய தொழிற்சாலை அமைத்திட, ராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் தற்போது செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்திட ரோக்கா நிறுவனம் முன் வந்துள்ளது. இந்த முதலீட்டின் மூலம் 200 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.
கேய்டன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு உள்ளிட்ட நிர்வாகிகளும் உடனிருந்தார்.
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் பயணத்தின் வரும் நாட்களில் மேலும் பல முன்னணி நிறுவனங்களைச் சந்தித்து தொழில், முதலீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.