கடலூரில் கடந்த ஆண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய 3 காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர் .ஆனால் இந்த ஆண்டு பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக பெரியாருக்கு கடலூர் மாவட்ட காவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
நேற்று தமிழகம் முழுவதும் பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா சமூகநீதி நாள் உறுதி யேற்பு நாளாகக் கொண்டாடப்படும் என முதல்வர் கடந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் அறிவித்தார் . அதைத்தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் சமூகநீதி நாள் உறுதியேற்பு நடைபெற்றது. கடலூரிலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பிலும், பல்வேறு இயக்கங்களின் சார்பிலும் கடலூர் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அனைவராலும் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது, பின் கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர், அதன்படி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று கண்காணிப்பாளர் சக்திகணேசன் தலைமையில் காவலர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர். அப்போது சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும் என வாசகங்கள் உள்ளடக்கிய உறுதிமொழியை அனைத்துக் காவலர்களும் ஏற்றனர்.
ஆனால் கடந்த ஆண்டு இதே பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த காவலர்கள் 3 பேர் கருப்பு சட்டை அணிந்து , பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலா பரவியது. பின் இதையடுத்து காவலர்கள் மூன்று பேரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் பணியிட மாற்றத்திற்கு நிர்வாக வசதிக்காக மாற்றப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் அப்பொழுது தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு அப்பொழுது இருந்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இது தனி மனித விருப்ப வெறுப்புகளை கொண்டு அவர்களின் வேலையில் கான்பிக்கக்கூடது என கண்டனம் தெரிவித்தனர்.
பின்னர் தற்பொழுது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் விழுப்புரம் மக்களவை உறுப்பினர் டி.ரவிக்குமார் அவர்களின் கோரிக்கையின் பேரில் 3 காவலர்களும் மீண்டும் கடலூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு தற்பொழுது பணியில் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பெரியாருக்கு மரியாதை செய்த காவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர்களை பணியிடை மாற்றம் செய்த அதே காவல்துறை இந்த வருடம் பெரியாருக்கு மரியாதை செலுத்தும் விதமாக சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.