செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள அரசினர் சிற்பக்கலை கல்லூரி மாணவர்கள், மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்க உள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 உலக நாடுகள் கலந்து கொள்வதை வித்தியாசமான கோணத்தில் உணர்த்தும் வகையில் இங்கு உலோக சிற்ப பிரிவில் பட்டப்படிப்பு படிக்கும் 3 மாணவர்கள் தங்கள் செய்முறை கூட வகுப்பறையில் உலக உருண்டை வடிவில் செஸ் போர்டு மெழுகு சிற்பம் வடித்து அசத்தி உள்ளனர்.

 

மெழுகில் தத்ரூபமாக வடிவமைக்கப்ட்டு வரும் இதில் உலக உருண்டை மீது செஸ் போர்டு மற்றும் காய்கள் உள்ளது போல் இந்த மெழுகு சிற்பத்தினை மாணவர்கள் மெழுகினை உருக்கி செய்து வருகின்றனர். அதேபோல் செஸ் விளையாட்டில் உள்ள ராஜா (கிங்) படைவீரரை(சோல்ஜர்) வெட்டி விளையாடும் வகையிலும் மற்றொரு கருத்தாழமிக்க மெழுகு சிற்பமும் செய்து வருகின்றனர். அதேபோல் மரச்சிற்ப பிரிவில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும் மரத்தில் செஸ் போர்டு காயின் (குதிரை) சிற்பங்கள் வடித்து வருகின்றனர்.


 

தங்கள் மாமல்லபுரம் பகுதியில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியினை வரவேற்கும் வகையில் இந்த செஸ் வழிப்புணர்வு மெழுகு சிற்பம் மற்றும் மரச்சிற்பத்தினை வடிவமைத்து வருவதாக இக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.



 

 வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து செஸ் வழிப்புணர்வு மெழுகு சிற்பம் செய்து வரும் மாணவர்களின் திறமையினை அக்கல்லூரி முதல்வர் மற்றும் உலோக சிற்ப பிரிவு பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.  இந்நிலையில் கல்லூரி மாணவர்களால் வடிக்கப்பட்ட சிற்பம் தமிழக முதல்வருக்கு நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

 

செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் :


 

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. மொத்தம் 25 வீரர்கள் பங்கேற்கும் நிலையில் ஏற்கனவே 2 அணி வீரர்கள் பட்டியல் ஏற்கனவே, வெளியிடப்பட்டிருந்தது. இந்த 2 பட்டியலிலும் ஒரு பெண் உட்பட 5 தமிழக வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

 

இந்நிலையில் இந்தியா சார்பில் பங்கேற்கும் 3-வது அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், சேதுராமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் தமிழக வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. நடப்பாண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஆண்கள் பிரிவில் 188 அணிகளும் பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.