சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் நாளை முதல் செயல்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. எஸ்ஐஆர் படிவங்களை நிரப்புவது சவாலாக உள்ளது என மக்கள் புகார் கூறி வரும் நிலையில் உதவி மையங்கள் அமைக்கப்படுகிறது.

Continues below advertisement

சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் நாளை முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை உதவி மையங்கள் செயல்படும் என்று மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் அறிவித்துள்ளார். வாக்காளர் உதவி மையங்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் என்றும் வாக்காளர் உதவி மையங்களுக்கு மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் ஒருவர் துணையாக வரலாம் எனவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும், எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்கள் தொடர்பாக உதவி மையங்களை அணுகலாம் என்றும் படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து வழிகாட்டுதலை அதிகாரிகள் வழங்குவார்கள் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இதனிடையே, எஸ்ஐஆர் பணிகளை நாளை புறக்கணித்தால் சம்பளம் கிடையாது என்று தலைமைச் செயலர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை பணிக்கு வராமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் நாளை மருத்துவ காரணங்களுக்கான விடுப்பை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் விடுப்பு எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். எஸ்ஐஆர் பணிகளை நாளை புறக்கணிக்கப்போவதாக வருவாய்த்துறை உள்ளிட்ட சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில், ஊழியர் சங்கங்களுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, எஸ்ஐஆர் பணிகளை நாளை முதல் புறக்கணிப்பதாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. உரிய திட்டமிடல் இன்றியும், பயிற்சிகள் அளிக்காமலும் எஸ்ஐஆர் பணிகள் நடப்பதாக புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.