பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் இரண்டு ஜாமின் மனுக்களும் உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுசில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா. இவர் தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது 3 மாணவிகள் கொடுத்த புகார்களின்பேரில் தனித்தனியாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் 2 வழக்குகளில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை செங்கல்பட்டு போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்தன.




இதையடுத்து இந்த 2 வழக்குகளிலும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2015, 2018,  2020 ஆகிய காலகட்டத்தில் மாணவிகளிடம் நடத்தப்பட்ட பாலியல் தொந்தரவுகள் தொடர்பாக பெறப்பட்ட வாக்குமூலத்தை 300 பக்க குற்றப்பத்திரிகையாக காவல்துறையினர் நீதிபதியிடம் சமர்ப்பித்தனர். இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது. ஜாமின் குறித்து சிவசங்கர் பாபு மீண்டும் மேல்முறையீடு செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




இதனிடையே கேளம்பாக்கத்தில் இருக்கும் கோவிலுக்குள் தங்களை விடுவது கிடையாது என சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சிவசங்கர் பாபா கைதானது பிறகு, உருவாக்கிய சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் சார்பில் இந்த மனுவானது மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் பிரபல திரைப்பட நடிகர் சண்முகராஜன் உள்ளிட்டோர் இந்த இயக்கத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.




சிவசங்கர் பாபா அறநெறி இயக்கம் என்ற அறக்கட்டளையின் செயலாளர் ஜி. கவிதா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார் அந்த மனுவில், கேளம்பாக்கம் பள்ளி மற்றும் அறக்கட்டளை நிர்வாகியாக செயல்பட்டு வரும் ஜானகி சீனிவாசன், ஸ்ரீராமராஜ்யா மற்றும் சாம்ராச்சன ஆகியோர் ஜாதியின் பெயரால் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர், மற்றவர்களை கோவிலுக்குள் உள்ளே விடுவது கிடையாது மேலும் அறக்கட்டளையின் பணத்தை திருடும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட உள்ளதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.




பாபா கைது செய்யப்பட்ட பின்  கேளம்பாக்கம் சாத்தான்குப்பத்தில் ஆஷிரம வளாத்திற்குள் பிராமணர் அல்லாதவர்கள் அனுமதிக்கபடவில்லை என்றும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதை தட்டி கேட்ட கவிதா என்பவரை சிலர் பின்தொடர்வதால், என் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், தயவுசெய்து என்னை அவர்ககளிடம் இருந்து காப்பாற்றும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மேலும், சிவசங்கர் பாபாவின் வழக்கை நடத்துவது உள்ளிட்ட அனைத்து விதமான பொறுப்புகளையும் மீனாட்சி ராகவன் என்பவர் கவனித்து வருவதாகவும், அவர்தான் பாபாவை வெளியில் வராமல் தடுத்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பள்ளி நிர்வாகத்துடன் சேர்ந்துகொண்டு பாபாவை ஏமாற்றி வருவதாக குற்றம் சாட்டி வைத்துள்ளனர். இவர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து வரும் கே.டி.ராகவனின் மனைவி  என்பது குறிப்பிடத்தக்கது.