காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில், உலகில் முன்னணி நிறுவனமான சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 


சாம்சங் தொழிற்சாலை சேர்ந்த ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலையில், தொழிலாளர் சிஐடியு தொழிற்சங்கத்தை தொடங்கினர். தொழிற்சங்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டும், இந்த கோரிக்கையை சாம்சங் நிர்வாகம் நிராகரிப்பது. இந்தநிலையில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி முதல் 900-திற்கும் மேற்பட்ட சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் போராட்டம் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் வாபஸ் பெற்றதாக அரசு அறிவித்துள்ளது.


இதுகுறித்த அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அமைச்சர்கள் தலைமையில் அரசு அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பல்வேறு நிலைகளில் பேச்சு வார்தைகளை நடத்தினார்கள். இப்பேச்சு வார்த்தையின் பயனாக சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக 15.10.2024 அன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 


நிர்வாகத்தரப்பு மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்தப் பேச்சு வார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.


1. தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.


2. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.


3. வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.


4. தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்ய வேண்டும். மேற்கண்ட அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டு. வேலை நிறுத்தத்தை கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர்.


இதனால், சாம்சங் தொழிற்சாலையில் நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்ததது. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சி.ஐ.டி.யு சொல்வது என்ன ?


நிர்வாகம் எங்களுடன் பேச வேண்டும் என கூறினோம். அது நல்லபடியாக வரும் என எதிர்பார்க்கிறோம். நிர்வாகத்திற்கும் இந்த சங்கத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என வலியுறுத்தி உள்ளோம்.நாளை பேரவை ஒப்புதல் கொடுத்தால், நாளை அதிகாரபூர்வமாக அறிவிப்போம். 


எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறிய நிர்வாகம் அரசின் அழுத்தத்தின் அடிப்படையில் , தற்போது முன்னேற்றம் கிடைத்துள்ளது. நாளை பேரவை கூட்டத்திற்கு பிறகு நல்ல முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கிறோம் .


தொழிலாளர்கள் தான் சங்கத்திற்கு அனுமதி தர வேண்டும். நிர்வாகம் அனுமதி தர வேண்டும் என்பது இல்லை, இன்று பேச்சு வார்த்தை திருப்தியாக இருந்தது நல்லபடியாக நடைபெற்றது. அரசு நல்ல முயற்சிகளை எடுத்திருக்கிறார்கள் .சங்கம் அங்கீகாரம் எங்களுடைய கோரிக்கையை அல்ல. 85 சதவீத தொழிலாளர்கள் இந்த சங்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் அந்த அங்கீகாரம் தான் அடிப்படை எங்களுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என சிஐடியு தெரிவித்துள்ளது.