காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் சாம்சங் ஆலை தொழிலாளர்கள் இன்று ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரத போராட்டம். 


சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்


காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய அளவில், மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்வது முன்னணி மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் , செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


அந்தவகையில் ஸ்ரீபெரும்புதூரில் உலகின் முன்னணி நிறுவனமான, சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் இந்த தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. 1900-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.


உற்பத்தி பாதிப்பு


சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.ஐ.டி.யூ சங்கத்தை தொடங்கினர். சங்கத்திற்கு அனுமதிய வேண்டும் , ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 17வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே 4 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சாம்சங் தொழிற்சாலையில் உற்பத்தி பெரும் அளவு பாதிப்படைந்துள்ளது. 


இதனிடையே இந்த போராட்டம் தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, விரைவான மற்றும் இணக்கமான தீர்வை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் தீர்வை ஏற்படுத்த, தனது அமைச்சகம் முழு ஆதரவை வழங்கும் எனவும் மன்சுக் மாண்டவியா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.


கோரிக்கைகள் என்னென்ன ?


சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியூ சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும். இன்டெர்னல் கமிட்டி அமைப்பதை கைவிட வேண்டும். சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க சிஐடியூ உறுப்பினர்களை நிறுவனம் உருவாக்கும் போட்டி தொழிலாளர் கமிட்டியில், இணையுமாறு ஆலைக்குள் பணி செய்யும் தொழிலாளர்களை அச்சுறுத்துவது, கட்டாயப்படுத்துவது மிரட்டுவது போன்ற வன்முறை நடவடிக்கைகளை கைவிட வேண்டும். போட்டி அமைப்பை உருவாக்குவதை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொள்ள வேண்டும். சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் அமைத்துள்ள சிஐடியூ தொழிற்சங்கத்தை பதிவு செய்ய விடாமல் , தொழிற்சங்க பதிவாளர் அலுவலகத்தை நிர்பந்திப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்தப் போராட்டத்தின் மூலம் வலியுறுத்தி வருகின்றனர். 


5 முறை பேச்சுவார்த்தைத் தோல்வி


இந்த போராட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், தொழிலாளர் நல துறை அதிகாரிகள் தலைமையில் தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் இடையே 5 முறை நடைபெற்ற பேச்சு வார்த்தை உடன்பாடு ஏற்படாமல் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அரசு தலையிட வலியுறுத்தி நேற்றைய தினம் தமிழக முழுவதும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் சாம்சங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


உண்ணாவிரத போராட்டம்


பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் அனைவரும் இரவு விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இன்று காந்தி ஜெயந்தி முன்னிட்டு, நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் போராட்ட பந்தலில் ஒன்று திரண்டு, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த போராட்ட விவகாரம் தொடர்பாக வரும் 7 தேதி பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாக சிஐடியு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக , சாம்சங் வேலை நிறுத்தம் விவகாரம் சம்பந்தமாக சாலை மறியலில் ஈடுபட்ட 926 மீது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஐடியு நிர்வாகிகள் தொழிலாளர்கள் என 926 பேர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அனுமதி இன்றி ஒன்று கூடுதல், காவல்துறையை பணி செய்யவிடாமல் தடுத்தல், உள்ளிட்ட எட்டு பிரிவுகளின் கீழ் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.