Valluvar Kottam Facilities: சென்னையின் அடையாளங்களின் ஒன்றான வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்பட்ட பிறகு, அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வள்ளுவர் கோட்டம் புனரமைப்பு:

சென்னையின் முக்கிய சுற்றுலா தளமாகவும், கலாச்சார அடையாளமாகவும் விளங்கும் வள்ளுவர் கோட்டம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் 1974-76 காலகட்டத்தில் கட்டப்பட்டது. 50 ஆண்டுகள் பழமையான இந்த அடையாளம் முறையான பராமரிப்பு இல்லாதது போன்ற காரணங்களால் பொலிவிழந்து காணப்பட்டது. இதன் பெருமையை மீட்டெடுக்கும் நோக்கிலும், வள்ளுவர் கோட்ட வளாகத்திற்குள் மீண்டும் பொதுமக்களை வரவழைக்கும் வகையில், ரூ.80 கோடி மதிப்பிலான புனரமைப்பு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். அந்த பணிகள் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அதனை இன்று அவரே திறந்து வைக்க உள்ளார்.

வள்ளுவர் கோட்டம் பெற்ற அப்கிரேட்கள்

வள்ளுவர் கோட்டத்தின் புனரமைப்பு பணிகள் முடிவுற்ற நிலையில், அதில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி, 

  • தரைதளத்தில் ஆயிரத்து 548 பேர் அமரும் வகையில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் முழு ஏசி வசதியுடன் கூடிய ”அய்யன் வள்ளுவர் கலாச்சார மையம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது. கலாச்சாரம் மற்றும் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்த இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  • திருவள்ளுவரின் 1330 திருக்குறள்கள் மற்றும் அதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வழங்கிய விளக்கவுரை அடங்கிய முதல் தளத்தில் உள்ள மணிமண்டபம் கலைநயத்துடன் மேம்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது
  • இலக்கிய விவாதங்கள் மற்றும் கல்வி ஆராய்ச்சிகளுக்கு உதவும் வகையில், 100 பேர் அமரக்கூடிய வகையில்  திருக்குறள் அரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம் அமைக்கப்பட்டுள்ளன
  • திருக்குறள் தொடர்பான 133 பொருட்களை விற்பனை செய்யும் கடை இடம்பெற்றுள்ளது
  • திருவள்ளுவர் சிலை அடங்கிய கல் தேருக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது
  • திருக்குறளில் உள்ள 133 அத்தியாயங்களில் ஒவ்வொன்றிற்கும் கல்வெட்டுகள் மற்றும் விளக்கப்படங்களுடன் முதல் தளத்தில் உள்ள தூண்களில் 133 தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
  • பார்வையாளர்களின் பசியை போக்கும் விதமாக 3336 சதுர அடி பரப்பளவில் ஃபுட் கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது
  • புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் தரைதளத்தில் 162 கார்களை பார்க் செய்வதற்கான இடவசதிகளை கொண்டுள்ளது
  • எளிய அணுகலுக்காக லிஃப்ட் மற்றும் சாய்தள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன

திருவாரூர் தேர் லைட் ஷோ

வள்ளுவர் கோட்டத்தின் நுழைவாயில்களை அழகுபடுத்துவதற்காக விரிவான ஸ்தபதி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பார்வையாளர்களை கவரும் விதமாக திருவாரூர் கோயிலில் உள்ள 106 அடி உயர தேரின் ஆடியோ வீடியோ விஷுவல் பிரதிபலிப்பு நிகழ்ச்சி மற்றும் நுழைவாயிலில் ஒரு இசை நீரூற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவீனமயமாக்கப்பட்ட இந்த கட்டிடத்தின் தூண்கள் மற்றும் முகப்பில் சிக்கலான கலைப்படைப்புகள் இடம்பெற்றுள்ளன. 

வள்ளுவர் கோட்டம் - திமுக வரலாறு:

தமிழறிஞர் வள்ளுவரை போற்றும் விதமாக அமைக்கும் வள்ளுவர் கோட்டத்திற்கு 1971ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவசர நிலைக்கு மத்தியில் 1976ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில், அதன் திறப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவித்தார். ஆனால், அதே ஆண்டில் ஜனவரி 31ம் தேதி கருணாநிதி தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது. இறுதியில், ஏப்ரல் 15, 1976 அன்று அப்போதைய குடியரசு தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்தார். அதேநேரம், கருணாநிதி நாட்டிய அடிக்கல் திறப்பு விழாவின் போது அகற்றப்பட்டது. 13 வருட இடைவெளிக்குப் பிறகு 1989ம் ஆண்டு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, தனது பதவியேற்பு விழாவிற்கு கருணாநிதி வள்ளுவர் கோட்டத்தைத் தேர்ந்தெடுத்தார்.