கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இறுதியாக, சென்னையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில், விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசும் வெளியிட்டுள்ளது.



 

சென்னை பசுமை விமான நிலையம்..

 

சென்னையில் இரண்டாவது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு  மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.



இதில் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு, பட்டா நிலங்களாகவும் , மீதம் உள்ள நிலங்கள் அரசு நிலமாகவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு  ஆகிய கிராமங்களில் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் அமைய உள்ள பகுதியில், ஏரி ,குளம், கால்வாய் என ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

காவல்துறை கண்காணிப்பில் கிராமங்கள்..

 

ஏகனாபுரம் கிராம மக்கள் 2 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து, தினமும் மாலை வேளையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான முறையில்  விவசாய வேலைகளை செய்து முடித்துவிட்டு, விமான நிலையம் வேண்டாம் என கூறி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். கிராம மக்கள் போராட்டத்தால், காவல்துறையினர் கண்காணிப்பு வளையத்தில் கிராமங்கள் வந்துள்ளது. குறிப்பாக அப்பகுதியில், பல இடங்களில் சோதனை சாவடி அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சில சமயங்கள் கிராம மக்கள் உள்ளே செல்ல வேண்டுமென்றால் கூட ஆதார் கார்டு, தேவைப்படுவதாக குற்றச்சாட்டை வைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.



 

மக்களை சந்திக்க தடை ?

 

8 வழி சாலை எதிர்ப்பு போராட்டக்காரர்களாக செயல்பட்டு வந்த, பழனியப்பன் மற்றும் பேராசிரியர் குணசேகர தர்மராஜ் ஆகியோர் பாதிக்கப்படும்,  மக்களை நேரில் சந்திக்க சென்ற பொழுது கடந்த ஆகஸ்ட் மாதம் 28 கைது செய்யப்பட்டனர். கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் சென்ற பொழுது அச்சரப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டார். இதேபோன்று, எஸ்டிபிஐ கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை சந்திக்க சென்ற பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர்.

 

அரசியல் கட்சியினர் செய்வது என்ன ?

 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக சென்று அப்பகுதி மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் நடத்தும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஆதரவு இருக்கும் என உறுதி அளித்தார். முன்னதாக, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், காஞ்சிபுரம் நகர் பகுதில்  தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை முதலில் நடத்தியிருந்தார். அப்பொழுது பாமக சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. பாதிக்கப்படும் பகுதிக்கு சென்று கருத்து கேட்க அனுமதி அளிக்கவில்லை அதனால்தான் காஞ்சிபுரம் நகர் பகுதியில், கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றதாக, பாமக தரப்பில், தெரிவிக்கப்பட்டு இருந்தது. விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கிராமத்திற்கு உள்ளே சென்று பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க இரண்டு  முறை அனுமதி மறுக்கப்பட்டது. இறுதியாக அனுமதி கொடுக்கப்பட்ட பொழுது, கிராம மக்களை நேரடியாக சென்று கருத்துகளை கேட்டு அறிந்தார்.



 

அம்பேத்காரிடம் மனு..

 

 

அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற்ற முடிந்த கிராம சபை கூட்டத்தில், பசுமை விமான நிலையம் எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம், நெல்வாய் , மேள்லேறி, அங்கமாபுரம் உள்ளிட்ட  கிராமங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் நூதன போராட்டத்தை அப்பகுதி மக்கள் கையில் எடுத்துள்ளனர். ஏகானாபுரம் கிராம மக்கள் பேரணியாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மனு ஒன்றினை அம்பேத்கரிடம் வைத்தனர்.



 

அதில் "மத்திய ,மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்தால் காஞ்சிபுரம் வட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ஆகிய இரண்டு வட்டங்களை உள்ளடக்கிய 13 கிராமங்களில் வாழ்வாதாரத்தை படுபயங்கரமாக பாழ்படுத்தி நாசமாக்கும் வகையில் சூழல் அமைகிறது என்ற நிலையை விளக்கி அரசுக்கு பல மடங்குகளில் மனு அளித்தும் கடந்த 67 நாட்களாக பாதிப்புகளுக்கு உள்ளாகும் அனைத்து கிராமங்களிலும், மாலை நேர கண்டன போராட்டம் நடைபெற்று வரும் நிலையிலும், இதுவரை மாநில அரசு செவி சாய்க்க மறுத்து வருவதால், தாழ்த்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட சமுதாய மக்களின் காவல் தெய்வம் ஆகிய தங்னிடம்  முறையிடுவது என பொதுமக்கள் முடிவு செய்து, இந்த மனுவினை தங்களிடம் சமர்ப்பிக்கிறோம்" என நூதன போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அரசு செய்தது என்ன ?

 

மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்பு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வருவதற்கு காலதாமதம் ஆனதால், கோபமடைந்த பொதுமக்கள்  ' எங்கள் பகுதிக்கு நேரடியாக வந்து முதலில் கருத்து கேட்ப கூட்டத்தை வையுங்கள் என புறக்கணித்தனர்' . இதனை அடுத்த சில நாட்களில், இழப்பீடு குறித்து அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டிருந்தது. மேலும் அந்த அறிக்கையில் விமான நிலையத்திற்கான காரணங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.



பரந்தூரில் உள்ள நீர் வழித்தடங்களில் நீர் ஓட்டம் எந்தவித தடையும் இன்றி தமிழ்நாடு அரசால் தொடர்ந்து பராமரிக்கப்படும். பெரிய நெல்வாய் ஏரி (360 ஏக்கர்) திட்ட செயல்பாட்டு பகுதிக்கு உள்ளே இருந்தாலும், அதனை ஆழப்படுத்தி தொடர்ந்து ஏரியாக பராமரிக்கப்படும். விமான நிலைய செயல்பாட்டினால் சுற்றுப்பகுதி நீர்நிலைகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தஅமைச்சர் எ.வ.வேலு, பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலத்திற்கான இழப்பீடு சந்தை விலையைவிட மூன்றரை மடங்கு அதிகமாக வழங்கப்படும் , பன்னூர், பரந்தூர் ஆகிய இடங்களில் ஒப்பிட்டு பார்க்கும் போது, பரந்தூரில் குறைந்த வீடுகள் தான் உள்ளது. அதனால் தான் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்படும் மக்களும் குறைவு. தமிழகத்தின் பொருளாதாரம், அந்நிய செலாவணி ஈட்டுவதற்காக முதல்வர் ஸ்டாலின், புதிய விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளார்" என்றார் என குறிப்பிட்டு இருந்தார்.

 

அரசு பல சமாதானங்களை சொல்லியும், தொடர்ந்து அப்பகுதி மக்கள் தினமும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஒவ்வொரு நாளும் போராட்டத்தின்பொழுது, அப்பகுதி பெண்கள் கண்ணீர் மல்க அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.