ஆன்ட்ராய்டு போன் விற்பனை
ஸ்மார்ட்போன் இப்போது நமது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாக மாறி விட்டது. மக்கள் அன்றாட வேலை செய்வதற்கும் , சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கும் , நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைவதற்கும், அலாரங்கள், ஷாப்பிங், தகவல் பறிமாற்றம் போன்ற அன்றாடத் தேவைகளுக்கும் அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
சுலபமான EMI வசதிகள்
செல்போன் மாடல்கள் அவ்வப்போது, புதிது புதிதாக மாறிக் கொண்டே இருக்கிறது. இதனை விற்க கூடிய கடைகளும் அதிகமாகி விட்டது. மிக எளிதாக செல்போன்களை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதற்கு சுலப தவனையில் , EMI வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுப்பதால், விற்பனை மற்றும் பயன்பாடு அதிகமாகி உள்ளது.
கடன்களை திருப்பி செலுத்தாதவர்கள் அதிகம்
நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில், 1.16 கோடி செல்போன் இணைப்புகள் செயல்பாட்டில் இருப்பதாக, தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் தரவுகள் தெரிவிக்கிறது. இந்நிலையில், நுகர் வோர் கடனில் பெரும் பகுதி வகிக்கும் செல்போன் விற்பனையில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாதவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
செல்போன்களை முடக்கும் திட்டம்
வாராக் கடன் அதிகரிப்பைத் தடுக்கும் வகையில், கடனை திருப்பிச் செலுத்தாதவரின் செல்போனை முடக்கும் நடவடிக்கை எடுக்க , நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கவுள்ளதாக தெரிகிறது. கடனில் வாங்கப்படும் செல்போனில் இதற்கென நீக்க இயலாத செயலி இடம்பெறச் செய்யப்படும். கடனை கட்டத் தவறினால், இதன் வாயிலாக செல்போன் செயலிழக்கச் செய்யப்படும். இதனால், கடனை திருப்பிச் செலுத்தும் வரை வாழ்வாதாரம், கல்வி, நிதிச்சேவைகளை இழக்க நேரிடும்.
ரகசியம் காக்க RBI வலியறுத்தல்
அத்தியாவசிய தொழில்நுட்ப வசதியை இழக்கும் அபாயம் காரணமாக கடன் பெற்றவரின் நிதி ஒழுக்கத்தை அதிகரிக்க இயலும் என கருதப்படுகிறது. எனினும் முடக்கப்படும் செல்போனின் தனிப்பட்ட தகவல்களின் ரகசியம் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.