காலையில் இறந்தவர் உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல அமரர் ஊர்தி இல்லாமல், 8 மணி நேரத்திற்கு பிறகு உடல் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் பகுதியை சேர்ந்தவர் சின்னபாப்பா(60) . இவர் கடந்த 3 தினங்களுக்கு முன் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று (22.05.2021) காலை அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்நிலையில் உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல உறவினர்கள் அரசு அமரர் ஊர்தியை பதிவு செய்த நிலையில் 8 மணி நேரம் ஆகியும் அமர் ஊர்தி வராததால் , இறந்தவரின் சடலத்தை வார்டில் வைத்து கொண்டு அவதிப்பட்டுள்ளனர்.
மேலும் வார்டில் இறந்து கிடந்த சின்னபாப்பாவை சுமார் 7 மணி நேரத்திற்க்கு மேலாக அகற்றாமல் வார்டிலேயே விட்டுள்ளனர். உறவினர்கள் மற்றும் வார்டில் உள்ள நோயாளிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சின்னபாப்பாவின் உடல் பிரேத பரிசோதனை அறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பருகூர் வரை ஒரே உடலை எடுத்த செல்ல முடியாது இன்னோரு உடல் இருந்தால் தான் பருகூர் போக முடியும் என அமரர் ஊர்தி ஓட்டுனரும், நிர்வாகத்தினரும் அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். காலை முதல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தங்களை அலைக்கழித்துவருவதாக உறவினர்கள் குற்றச்சாட்டி மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இதனையடுத்து சுமார் 8 மணி நேரத்திற்கு பின்னர் அரசு அமரர் ஊர்தி வரவழைக்கப்பட்டு உடல் பருகூர் அனுப்பிவைக்கப்பட்டது.
இது குறித்து அரசு அமரர் ஊர்திகளின் பொறுப்பாளர் வெங்கடேஷை தொடர்பு கொண்டு கேட்ட போது, ’’அதிக இறப்பு காரணமாக அமரர் ஊர்தி வாகனங்கள் வெளியில் சென்றுள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. போதிய வாகனம் இல்லாததாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன பற்றாக்குறையால் அதிக தூரம் ஒரே உடலை கொண்டு செல்லும் போது வழியில் மற்றோரு உடலையும் கொண்டு செல்வது தாங்கள் கடைபிடிக்கும் சாதாரண நடைமுறை தான் என்றும் விளக்கம் கூறினார். சம்பவம் நடக்கும் பொழுது மருத்துவமனை வளாகத்தில் அமரர் ஊர்தி எதுவும் இல்லை என்றும் வாகனம் வந்த உடனே அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ள வேலையில் , இறந்தவரின் உடலை 7 மணி நேரத்துக்கும் மேலாக மற்ற நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டிலே காக்கவைத்த சம்பவம் , அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .