சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய தபால் பிரிவுக்கு வந்த பார்சல்களில் முதுகெலும்பு இல்லாத உயிரினங்கள் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தபால் பிரிவுக்கு வந்த பார்சல்களை ஆய்வு செய்தனர். அப்போது போலாந்து நாட்டில் இருந்து அருப்புக்கோட்டையில் உள்ள முகவரிக்கு வந்த பார்சல் மீது சந்தேகம் கொண்டு பிரித்து பார்த்தனர். அதில் 107 மருத்துவ குப்பிகளில் ஏதோ ஊர்ந்து செல்வதாக கண்டனர். உடனே ஒரு குப்பியை பிரித்து பார்த்த போது அதில் சிலந்தி இருந்தது.
எந்த வகையிலும் பாதிக்காமல் காற்று வசதியுடன் இருக்க 107 குப்பிகளை தயார் செய்து அதில் சிலந்திகள் அடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து மத்திய வன உயிரின அதிகாரிகளுக்கு தகவல் தந்தனர். உயிரின அதிகாரிகள் வந்து சிலந்திகளை ஆய்வு செய்தனர். அப்போது இந்த வகை சிலந்திகள் டரண்டுலா வகையை சார்ந்தது என கண்டுபிடித்தனர் . இந்த வகைவகை சிலந்திகள் வட மற்றும் மத்திய அமெரிக்காவிலும் மெக்சிகோ நாட்டிலும் வாழ கூடியது. வன உயிரின சட்டப்படி உரிய அனுமதி இல்லாமல் கொண்டு வர கூடாது . இருந்தும் சிலந்திகளை எவ்வாறு கொண்டுவந்தார்கள் உள்ளிட்ட இவற்றைக் குறித்து தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வகைப் உயிரினங்களால் ஏதாவது பாதிப்புகள் ஏற்பட கூடும் என்பதால் திருப்பி அனுப்பி விடுங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சிலந்திகளை போலாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்ப விமான நிலைய சுங்க அதிகாரிகள் தபால் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் அருப்புக்கோட்டையில் உள்ள முகவரிக்கு யாருக்கு வந்தது, எதற்காக சிலந்தியை கடத்தி வந்தார்கள் என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் சிலந்திகள் அடிக்கடி கடத்தப்படுவதும் அவை சுங்க இலாகா அதிகாரிகள் மூலம் பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக இதுபோன்ற சிலந்திகளை கடத்துவதற்கு முக்கிய காரணம் இதுபோன்ற சிலந்திகள் பல்வேறு மருத்துவ பயன்பாட்டுக்கு உதவுவதால் இவை அதிக அளவு கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட பார்சலில் மூலமாக விலை உயர்ந்த போதை மாத்திரைகளும் கட்டப்பட்டிருந்தன. கடந்த சில வருடங்களாகவே சென்னை விமான நிலையத்தில் பார்சல்கள் மூலம் கடத்தல் சம்பவங்கள் அதிக அளவு நடைபெற்று வருகின்றன. இதனை தடுப்பதற்காக சிறப்பு குழுவை அமைத்து சுங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கடத்தல் சம்பவங்களை குறைக்க வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.