சென்னை புறநகரில் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்னும் 6 மாதங்களில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார். மேலும் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டால், பேருந்து நிலையத்தை மக்கள் பயன்படுத்துவது எளிதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்த அவர் விரைவில் இதற்கான விரிவான திட்டம் உருவாக்கப்பட்டு 3 மாதங்களில் பணி தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் அதிகரிக்கும் மக்கள் தொகை கருத்தில் கொண்டும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை இயக்குவதற்கு, பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்த வண்ணம் உள்ளன. கிளாம்பாக்கத்திற்கு வரும் பயணிகளின் பிரதான எதிர்பார்ப்புக்ளில் ஒன்று மின்சார ரயில்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பதுதான்.
இதனால் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்தது. தமிழ்நாடு அரசின் பங்களிப்போடு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. வண்டலூர் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில், மூன்று நடைமுறைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் நிலைய மேலாளர் அறை, ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், டிக்கெட் அலுவலகம், குடிநீர் வசதி, இருக்கை வசதி என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரயில்வே நடைமேடைகளில் சிறுசிறு கடைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் நிலையம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி ஆகியவற்றின் கூடிய நடை மேம்பாலம் அமைய உள்ளது.