காஞ்சிபுரம் தற்போது பெரு நகராட்சியாக உள்ளது. இந்த நகராட்சி 36.14 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 2 லட்சத்து 34 ஆயிரத்து 353 பேர் இருந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த நகராட்சி மொத்தம் 51 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னையை ஒட்டி உள்ள மாவட்டத்தின் தலைநகரம் என்பதால், காஞ்சிபுரம் நகராட்சி பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகரித்திருப்பதால், வெளியூர்களில் இருந்தும் பலர் காஞ்சிபுரம் நகரில் குடியேறியுள்ளனர்.



 

இந்நிலையில் தமிழக அரசு காஞ்சிபுரம் பெரு நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. தரம் உயர்த்தப்பட உள்ள காஞ்சிபுரம் நகராட்சியின் அருகாமையில் 7 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராமங்கள் புதிய மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன. தற்போது 36.14 சதுர கி.மீட்டராக இருக்கும் காஞ்சிபுரம் நகராட்சி, மாநகராட்சியாக மாறும்போது இதன் பரப்பு 100 சதுர கி.மீட்டராக அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் , காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களையும் புதியதாக உருவாக்கப்படும் காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



 

இந்நிலையில் முத்தியால்பேட்டை ஊராட்சியில் மொத்தம் 1464 குடும்பங்களில் 1040 குடும்பங்கள் ஆண்டு வருமானம் 28ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருவாய் உள்ளவர்களாக உள்ளனர். 2200 பேர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்து வருகின்றனர், கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிடைக்கும் வருமானத்தால் குடும்பம் நடத்தி வருகின்றனர். தற்போது முத்தியால்பேட்டை ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் அனைத்து குடும்பங்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமை நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உருவாகும்.



 

அதனால் கிராமமக்கள் நலன் கருதி  முத்தியால்பேட்டை ஊராட்சியை காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் இணைக்காமல், தற்போது உள்ள கிராம ஊராட்சியாகவே செயல்பட  வேண்டும் என கோரிக்கை விடுத்து முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஆர்.வி.ரஞ்சித் குமார் தலைமையில் முத்தியால்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். ஓரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

 

 


மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X