சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடி செல்லும் தனியார் பயணிகள் விமானம், இரண்டாவது நாளாக திடீரென  ரத்து. இதனால் அந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தவித்து, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து இன்று இரவு 7:30 மணிக்கு, சென்னை நாசிக் பயணிகள் விமானத்தில், ரத்து செய்யப்பட்ட சீரடி விமான பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

 

சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடி செல்லும் (ஸ்பைஜெட்) தனியார் பயணிகள் விமானம்,  பிற்பகல் 2:20 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானம் காலதாமதமாக மாலை 4:10 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் 142 பேர் சீரடி செல்ல முன்பதிவு செய்து இருந்தனர். அவர்களில் பலர் ஏற்கனவே, ஆன்லைன் மூலமாக, ஃவெப் செக் செய்து, போர்டிங் பாஸ் எடுத்துவிட்டனர். அவர்கள் பகல் ஒரு மணி அளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்துவிட்டனர்.

 

இந்த நிலையில், திடீரென அந்த தனியார் விமான நிறுவனம், சென்னை-சீரடி பயணிகள்  விமானம், பிற்பகல் 2:20 மணிக்கு பதிலாக, மாலை 4:10 மணிக்கு தாமதமாக  புறப்பட்டு செல்லும் என்ற அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்டு, விமானமே ரத்து என்று அறிவித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், சென்னை விமான நிலையத்திற்குள், அந்த தனியார் விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதம் செய்தனர். அதோடு விமானம் ரத்துக்கு என்ன காரணம்? என்றும் கேட்டனர். ஆனால் தனியார் விமான நிறுவனம், நிர்வாக காரணங்களுக்காக  சீரடி விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

 

இரவு 7:30  மணிக்கு சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் விமான நிலையத்திற்கு எங்களுடைய பயணிகள் விமானம் ஒன்று சொல்கிறது. அந்த விமானத்தில் நாசிக் சென்று, அங்கிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீரடிக்கு, சாலை வழியாக வாகனத்தில் செல்லலாம் என்று கூறினார்கள். ஆனால் பெரும்பாலான பயணிகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அந்த தனியார் விமான நிறுவனம் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. விருப்பப்படுகிறவர்கள் நாசிக் விமானத்தில் சென்று, அங்கிருந்து வாகனத்தில் சீரடி செல்லலாம். இல்லையேல் சீரடி விமான டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு, ரீஃபண்ட் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்து விட்டனர்.

 

இதனால் சிறிது நேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள், அதன்பின்பு வேறு வழியின்றி பலர் இரவு 7:30 மணி நாசிக்  விமானத்தில் பயணிக்க, டிக்கெட்டுகளை மாற்றினார்கள். மற்றும் சிலர் பயணங்களை ரத்து செய்து விட்டு திரும்பிச் சென்றனர். இதே விமான நிறுவனம் நேற்றும், சென்னை- சீரடி விமானம் காலதாமதம் என்று முதலில் அறிவித்துவிட்டு, அதன்பின்பு விமானத்தை ரத்து செய்தது. நேற்றும் பயணிகள் இதே போல் அந்த விமான நிறுவன கவுண்டர்களை சூழ்ந்து கொண்டு, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதன்பின்பு இரவு 7:30 மணிக்கு நாசிக் செல்லும் விமானத்தில் சீரடி விமான பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக இதை போல், சென்னை-சீரடி விமானம் தாமதம் என்று அறிவிக்கப்பட்டு விட்டு, அதன் பின்பு திடீரென விமானம் ரத்து செய்யப்பட்டதும், அதனால் பயணிகள் விமான நிலையத்துக்குள் வாக்குவாதத்தில்  ஈடுபட்டதோடு, ஆர்ப்பாட்டம் செய்ததும், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.