என் மண் என் மக்கள் யாத்திரை விழாவில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று சென்னைக்கு வருகை தருகிறார்,
என் மண் என் மக்கள்:
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் மக்களை நேரடியாக சந்தித்து வாக்குகளை கவரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் ஜூலை 28 ஆம் தேதி இராமநாதபுரத்தில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பாதயாத்திரையை தொடங்கினார். அனைத்து மாவட்டங்களிலும் தொகுதி வாரியாக யாத்திரை சென்ற அண்ணாமலைக்கு செல்லும் இடமெல்லாம் மக்களின் ஆதரவு பெருமளவில் இருந்தது.
ஜே.பி.நட்டா வருகை:
மேலும் தமிழ்நாட்டில் ஆளும் கட்சி செய்த தவறுகளை சுட்டிக்காட்டி, பாஜக ஆட்சிக்கு வந்து செய்த சாதனைகளை பட்டியலிட்டு மக்களிடம் அண்ணாமலை ஆதரவு கேட்டார். அந்த வகையில் 200வது தொகுதியாக சென்னையில் இன்று என் மண் என் மக்கள் யாத்திரை செல்லவிருந்தார் அண்ணாமலை. இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்ட நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது. அதேசமயம் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகேயுள்ள மின்ட் சாலையில் பாஜக பொதுக்கூட்டத்துக்கு மட்டும் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை 5.30 மணியளவில் சென்னை வருகை தருகிறார். அவருக்கு விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து கார் மூலம் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்லும் அவர், மின்ட் சாலையில் சிறிது தூரம் நடந்து மேடைக்கு செல்வார் என கூறப்படுகிறது.
ஓ.பி.எஸ்.வுடன் சந்திப்பு:
இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டத்தில் பேசும் அவர், பின்னர் 8 மணியளவில் நட்சத்திர ஹோட்டலுக்கு செல்கிறார்.அங்கு இரவு உணவு முடிந்ததும், ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சி தலைவர்களை ஜே.பி.நட்டா சந்தித்து பேசுகிறார். இதில் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது, வெற்றிக்கான வியூகங்களை வகுப்பது, தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்து கேட்புக் கூட்டம், கூட்டணி பேச்சுவார்த்தை என பல தகவல்களை கேட்டறிய உள்ளார்.
பின்னர் இரவு 9.15 மணியளவில் விமான நிலையம் செல்லும் ஜே.பி.நட்டா இரவு 9.45 மணியளவில் செல்லும் விமானத்தில் டெல்லி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சென்னை வரவுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.