49-வது நினைவு தினம்


தமிழகத்தைப் பொறுத்தவரை பல அரசியல் கட்சிகள் தொடங்கி அமைப்புகள் வரை பெரியாரின் கொள்கைகளை அடிப்படை வைத்தே இயங்குகின்றன. இந்த அளவிற்கு பெரியார் தமிழகத்தில்,  முக்கிய இடம் பிடித்துள்ளார். பெரியாரின் 49-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அவரது நினைவு தினத்தையொட்டி தந்தை பெரியாரின் உருவ படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையொட்டி இன்று காலை 10 மணிக்கு அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கீழே உள்ளபெரியாரின் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர் துரைமுருகன் உட்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். "பெரியார்  வாழ்ந்த பொழுது எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம், 49 ஆண்டுகளுக்கு பிறகும் வீரியம் குறையாமல் இருக்கிறது , ஆரியம் கற்பிக்கும் ஆதிக்கத்தை அது சாய்த்தேன தீரும்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 



File Photo: சங்கரமடம்


காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடம்


இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகள், சமத்துவமற்ற தன்மை, பெண்களுக்கு உரிமை மறுப்பு உள்ளிட்டவைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து எழுதியும் பேசியும் வந்த பெரியாருக்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களுக்கு முன்பு சிலை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்பாக வைக்கப்பட்ட பெரியாரின் சிலையின் கீழ் கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை வழிபடுகின்றவன் காட்டுமிராண்டி என்ற வாசகங்களும் எழுதப்பட்டு இருக்கும். இதே போல காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்தின் முன்பாகவும் பெரியார் சிலையை வைக்க திராவிடர் கழகம் திட்டமிட்டது. 



File Photo:- பெரியார் சிலைக்கு மரியாதை



காஞ்சிபுதில் அமைந்துள்ள காஞ்சி சங்கர மடம் ஆன்மீக மடமாக மட்டும் இல்லாமல், ஒரு படி மேலே சென்று அரசியல் செல்வாக்குமிக்க இடமாகவும் விளங்கி வருகிறது. குடியரசுத் தலைவர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் சங்கர மடத்தில் உள்ள சங்கராச்சாரியார்களை தரிசித்துச் செல்வது வழக்கம். அந்த அளவிற்கு செல்வாக்குமிக்க மடமாக காஞ்சிபுரம் சங்கரமடம் விளங்கி வருகிறது. 



File Photo:- பெரியார் சிலைக்கு மரியாதை


 


பெரியார் சிலை வைப்பதற்காக..!



1974 ஆம் ஆண்டில் சங்கரமடம் அருகே பெரியார் சிலை வைப்பதற்காக, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் அதற்காக அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனிடையே இந்தியா முழுவதும் அவசர நிலை சட்டம் அமலுக்கு வந்ததால் பெரியார் சிலை அமைப்பதற்கான முயற்சிகள் சில மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு, செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் காஞ்சி. சி.பி. இராசமாணிக்கம் நகராட்சி,  காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அனுமதியுடன் பெரியார் நூற்றாண்டு விழாவில் சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு அனுமதி மறுத்தது. இந்த விவகாரம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கூட எதிரொலித்தது. 




 


நீதிமன்றத்தின் அனுமதியுடன் சங்கர மடம் அருகே சிலை வைக்கப்பட்டது..



இதனையடுத்து காஞ்சி. சி.பி. இராசமாணிக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார். வழக்கினை விசாரித்த  நீதியரசர் வீ.இராமசாமி அரசுக்கு மூன்று வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தாக்கீது பிறப்பித்தார் (7.9.1979). இதனையடுத்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் சங்கர மடம் அருகே சிலை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிலை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று 24-02-1980, அன்று திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கி. வீரமணி திறந்து வைத்தார்.




கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சங்கரமடம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு, சில குறிப்பிட்ட அமைப்பினர் மட்டுமே பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி,  பல்வேறு அமைப்பினர் பெரியார் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த வருடமும் திக, திமுக, அதிமுக, தேமுதிக, மக்கள் மன்றம், விடுதலை சிறுத்தைகள்  கட்சி உள்ளிட்ட ஏராளமான அமைப்பினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்