உலகம் முழுவதும் கொரோனா தொற்றானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் மூன்றாம் அலை தொடங்கும் அபாயம் உள்ளது, இதனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்களால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 61 ஆயிரத்து 495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 62 பேருக்கு பாதிப்பு உறுதியானது. நேற்று முன்தினம் வரை 59 ஆயிரத்து 909 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 81 பேர் குணம டைந்து வீடு திரும்பினர். நேற்று முன்தினம் வரை 819 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. கொரோனா பாதித்த 705 பேர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 59 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவம னைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 


இந்த நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு கொரோனா 2-ஆவது அலை அச்சுறுத்தல் காரணமாக குறை கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.

 

மேலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்க வசதியாக, ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகில் புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைதோறும் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என்றாலும், ஏராளமான பொதுமக்கள் திரண்டுவந்து, தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அந்த புகார் பெட்டியில் போட்டு விட்டு செல்கின்றனர்.

 


 

இந்நிலையில் இன்று நடந்த வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில், மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்தும் இடத்திற்கு சென்று தடுப்பூசி செளுத்திக்கொள்ள முடியாது என்பதால் அவர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அவரவரின் விருப்பத்திற்கு இணங்க தடுப்பூசி செலுத்தப்பட்டது.

 


 

இதில் மாற்றுத்திறனாளிகள் மட்டுமின்றி தடுப்பூசி செலுத்த முடியாதவர்களும் செலுத்திக் கொள்ளதவர்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த புதிய முயற்சியினை பல்வேறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.